ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: அவசர விசாரணைக்கு ஏற்பு!

jalliதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்ச நீதிமன்றம் அவசர மனுவாக ஏற்றுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், மத்திய அரசு கடந்த 8ம் திகதி, ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம், காளை ஆகியவற்றை காட்சிப் பொருளாகவோ அல்லது அவற்றுக்கு பயிற்சி அளித்து வித்தை காட்டவோ பயன்படுத்தக்கூடாது.

இருப்பினும், சமுதாய வழக்கம் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளின்படி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கும், மகாராஷ்டிரம், ஹரியாணா, கர்நாடகா, பஞ்சாப், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதற்கும் காளைகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

அத்துடன், ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதற்கு சில நிபந்தனைகளும் மத்திய அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை எதிர்த்து யாராவது வழக்கு தொடர்ந்தால், தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று ’கேவியட் மனு’ தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட தரப்பினரால் உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடத்த உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு ஏற்கக் கோரிய விலங்குகள் நல வாரியம், பெடா (PETA) அமைப்பு உள்ளிட்ட தரப்பினரின் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கை நாளை விசாரிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: