முக்கிய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் கைது தீவிரவாதிகள் நவாஸ்ஷெரீப் மீது கடும் கோபம்

nawasபஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த 2–ந்தேதி 6 பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.

சுமார் 80 மணி நேர துப்பாக்கி சண்டைக்குப் பிறகு 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த வெடிப்பொருட்கள் குவியல், குவியலாக கண்டு பிடிக்கப்பட்டன.

தேசிய விசாரணை குழு அதிகாரிகள் 10 பேர் பதான்கோட் விமானப்படை தளத்தில் முகாமிட்டு தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். நேற்று அவர்கள் ஆய்வு நடத்திய போது தீவிரவாதிகள் பயன்படுத்திய பைனா குலர், செல்போன், ஏ.கே.47 ரக துப்பாக்கி ஆகியவற்றை கண்டு பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் விமானப்படை தளத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே டெல்லியில் தேசிய விசாரணை குழுவின் மற்றொரு பிரிவினர் நேற்று குருதாஸ்பூர் போலீஸ் சூப்பிரண்டு சல்விந்தர்சிங்கிடம் விசாரணை நடத்தினார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) 2–வது நாளாக விசாரணை நடந்து வருகிறது. சல்விந்தர் சிங்கிடம் நடந்த விசாரணை மூலம் சில துப்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து பதான்கோட் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகளை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை இந்தியா நாடியுள்ளது. சர்வதேச போலீஸ் உதவியுடன் வெளிநாடுகளில் உள்ள சில தீவிரவாதிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜெயஷ்– இ–முகமது தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை உரிய ஆதாரங்களுடன் இந்தியா வழங்கியது. அந்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

இந்த நிலையில் ஜெயஷ்–இ–முகமது தீவிரவாத தலைவன் மசூர்அசார் “நாங்கள்தான் பதான்கோட்டில் தாக்குதல் நடத்தினோம்” என்று பகிரங்கமாக அறிவித்தான். இதனால் நவாஸ் ஷெரீப்புக்கு நெருக்கடி அதிகரித்தது. அவர் இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டார்.

மேலும் பதான்கோட் தளத்தை தகர்க்க பாகிஸ்தானில் சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று அவர் ஒத்துக்கொண்டார். இதுபற்றி முழுமையாக விசாரிக்க அவர் தனி விசாரணைக் குழு அமைத்துள்ளார்.

வருகிற 15–ந்தேதி இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் சந்திப்பு நடைபெற இருந்தது. பாகிஸ்தான் அரசு பதான்கோட் விஷயத்தில் நடவடிக்கை எடுக்காத வரை பேச்சு வார்த்தைக்கு வர மாட்டோம் என்று இந்தியா தரப்பில் தெரிவக்கப்பட்டது.

இதையடுத்து தீவிரவாதிகளை வேட்டையாட நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானில் உள்ள குஜரன்வாலா, ஜீலம், பகவல் பூர் மாவட்டங்களில் நடந்த அதிரடி சோதனைகளில் அந்த தீவிரவாதிகள் பிடிபட்டனர். இவர்கள் தவிர மேலும் சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பகவல்பூர் மாவட்டத்தில்தான் ஜெயஷ் – இ– முகமது தீவிரவாதிகளின் தலைமையகமும், பயிற்சி கூடங்களும் உள்ளன. அங்கு பலர் கைது செய்யப்பட்டிருப்பதால் தீவிரவாதிகள் நவாஸ்ஷெரீப் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர். என்றாலும் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்துமாறு நவாஸ்ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

-http://www.athirvu.com

TAGS: