சென்னை: மெளலானா மசூத் அஸார்.. இந்தியாவை 1999ம் ஆண்டு நடுநடுங்க வைத்த காந்தஹார் விமானக் கடத்தல் சமயத்தில் மத்திய அரசால் விடுவிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளில் இவனும் ஒருவன். 1999ம் ஆண்டு நேபாளத் தலைநகர் காத்மாண்டிலிருந்து டெல்லிக்குக் கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டது. முதலில் பாகிஸ்தானுக்கும் பின்னர் கடைசியில் அது ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கும் கொண்டு செல்லப்பட்டது. விமானத்தில் இருந்தவர்களை உயிருடன் விட வேண்டுமானால் அஸார் உள்ளிட்ட 3 முக்கியத் தீவிரவாதிகளை இந்தியா விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அப்போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் இருந்தது. விமானத்தில் இருந்த 155 பேரின் உயிரைக் காப்பதற்காக மத்திய அரசு தீவிரவாதிகள் கேட்ட 3 பேரையும் விடுவிக்க முடிவு செய்தது.
அப்போது ஆப்கானிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் இல்லை. தலிபான்கள் பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்கியிருந்த நேரம் இது. இதனால் இந்தியாவால் அதிரடியாக செயல்பட முடியாத நிலை. இந்தியாவுக்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலையும் கூட.
இதனால் வேறு வழியின்றி இந்தியா அந்த 3 முக்கியத் தீவிரவாதிகளையும் காஷ்மீர் சிறையிலிருந்து விடுவித்து பத்திரமாக கூட்டிச் சென்று தலிபான்களிடம் ஒப்படைத்தது. இதையடுத்து விமானமும், பயணிகளும் விடுவிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் இந்த அஸார் தலைமையிலான இயக்கம் பெரும் பலம் பெற்று செயல்படத் தொடங்கியது. இந்தியா அன்று விடுவித்ததன் பலனை 2001ம் ஆண்டிலேயே அனுபவித்தது. 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றம் மீது ஜெய்ஸ் இ முகம்மது அமைப்புத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் மூளையாக திகழ்ந்தது அஸார்.
தாவூத் இப்ராகிம் போல தொடர்ந்து இவனும் பாகிஸ்தானிலேயே அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வருகிறான். இவனை ஒப்படைக்குமாறு இந்திய அரசு பலமுறை கோரியும் கூட பாகிஸ்தான் கண்டு கொள்ளவில்லை. இப்போது பதன்கோட் தாக்குதலில் இவன் சிக்கியுள்ளான். இப்போது அவன் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இப்போதும் கூட அஸார் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே தெரியவில்லை.
அன்று இந்தியாவால் விடுதலை செய்யப்பட்ட அஸார், தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தாக்குதல், இப்போது பதன்கோட் தாக்குதல் என இவனது செயல்கள் தொடர்ந்தபடிதான் உள்ளன. அன்றைய தவறுக்கு இன்று வரை அறுவடை செய்து வருகிறது இந்தியா.