பாலமேட்டில் சீமானை தடுத்த போலீஸ்- ஜல்லிக்கட்டை அலட்சியப்படுத்திய கட்சிகளை புறக்கணிக்க வலியுறுத்தல்!

seeman_001மதுரை: தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டை பெற்றுத்தராமல் அலட்சியப்படுத்திய அரசியல் கட்சிகளை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். முன்னதாக பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் வாடிவாசலுக்குள் நுழைய முயன்ற சீமானை போலீசார் தடுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு நடைபெறாத காரணத்தால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், மாடுபிடி வீரர்களும் கறுப்பு பொங்கல் அனுஷ்டித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூருக்கு சென்ற சீமான் மக்களிடையே ஜல்லிக்கட்டு வரலாறு குறித்தும், தடை விதிக்கப்பட்டது ஏன் என்பது பற்றியும் பேசினார். பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலுக்குள் நுழைய முயன்ற சீமானை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையால் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் இப்பகுதிகளில் பொங்கல் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டு கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பொங்கல் தினமான நேற்று மாலை 4 மணிக்கு பாலமேட்டிலும், பின்னர் 5 மணியளவில் அலங்காநல்லூரிலும் அந்தந்த இடங்களில் உள்ள வாடிவாசல் பகுதியில் திரண்டிருந்த மக்கள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜல்லிக்கட்டு தடை குறித்து பேசினார். அவர் பேசியதாவது:

மத்திய, மாநில அரசுகள் தமிழர்களின் பாரம்பரியத்தையும் இந்து மக்களின் குலதெய்வமாகவும், சிவபெருமானுக்கு வாகனமாகவும் விளங்கக் கூடியது காளைகள் இனம். இவ்வாறு பல ஆயிரம் வருடங்களாக வழிபாட்டு சின்னமாகவும், தமிழர்களின் பாரம்பரியத்தை உலகறிய செய்தது காளை இனம்.

தற்போது இந்த இனத்தை அழிப்பதற்கு அந்நிய நாடுகள் செய்யும் சதிக்கு விலங்குகள் நலவாரியம் துணை போகிறது. நாட்டு மாடுகள் இனத்தை அழிப்பதற்கும், கலப்பின மாடுகளை உற்பத்தி செய்வதற்கும் அந்நிய சக்திகள் தயாராக உள்ளது.

1970ம் ஆண்டு கணக்குப்படி 7 கோடி நாட்டு மாடுகள் இருந்துள்ளது. தற்போது இந்த இனமே அழிந்து வருகிறது. நாட்டு மாடுகள் இனத்தின் ஒரே அடையாளமாக உள்ளது ஜல்லிக்கட்டு காளை இனம் மட்டும்தான். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பாரம்பரியத்தின் அடையாளமாகவும், கலாச்சார சின்னமாகவும் தங்கள் குடும்ப பெண்களின் கற்பிற்கு இணையான கவுரவத்தோடு போற்றி பாதுகாத்து வருகின்றனர்.

இதனை சில ஆதிக்க சக்திகள் துணையோடு சங்ககாலம் முதல் தொன்று தொட்டு நடந்துவரும் வீர விளையாட்டின் அடையாளத்தை முடக்கவும் நினைக்கிறது. தமிழகத்திற்கு எதிரான நீதிகள் உடனடியாக வழங்கப்படுகிறது. கேரளாவில் யானைகள் விளையாட்டை அனுமதிக்கும் மத்திய, அரசு தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்க முயற்சி செய்கிறது என்றும் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக அரசு ஜல்லிகட்டு தடைக்கு மறுசீராய்வு மனு தாக்கல் செய்து 6 மாத காலத்திற்கும் மேலாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாத உச்சநீதிமன்றம் விலங்குகள் நல அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தாக்கல் செய்த மனு மீது உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு இடைக்கால தீர்ப்பின் மூலம் தடைபடக்கூடிய விஷயம் அல்ல, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராடினால் பாரம்பரிய வீரவிளையாட்டின் பெருமையை காப்பாற்றலாம்.

தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டை பெற்றுத்தராமல் அலட்சியப்படுத்திய அரசியல் கட்சிகளை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என கூறினார். ஜல்லிக்கட்டை நடத்த, மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீமான் கேட்டுக்கொண்டார்.

-http://tamil.oneindia.com

TAGS: