தமிழ்நாட்டின் உரிமையைப் பறித்து கேரளாவுக்கு துணைபோகும் மத்திய அரசு! வைகோ கண்டனம்!

parambikulamdam_1மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை, திருப்பூர் மாவட்டங்களின் பாசன நீர் மற்றும் குடிநீர் ஆதாரமாக பரம்பிக்குளம் – ஆழியாறு அணை விளங்குகிறது. பி.ஏ.பி. என்று அழைக்கப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பரம்பிக்குளம் அணை மற்றும் அதன் துணை அணைகளான தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள், கேரளாவின் வனப்பகுதியில் அமைந்துள்ளன. பி.ஏ.பி. திட்டத்தின் முக்கிய அணையாகத் திகழும் பரம்பிக்குளம் அணை தமிழக பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டது ஆகும். இந்த அணைகள் கேரள மாநிலத்தின் உட்கோட்டப் பகுதியில் இருந்தாலும், அணை பராமரிப்பு தமிழக அரசின் பொறுப்பில்தான் இருந்து வருகிறது.

1958 நவம்பர் 9 இல் பி.ஏ.பி. திட்டம் உருவாக்கப்பட்டு, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. இத்திட்ட ஒப்பந்தம் குறித்து 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அதில் இடம் பெற்றுள்ளதால், 1992 ஆம் ஆண்டு பி.ஏ.பி. திட்டம் பற்றி அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கேரள மாநில அரசு, “கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளை தங்கள் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீரை கேரள மாநிலம் வழங்கும். அணை பராமரிப்புக்கான செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும்” என்று நிர்பந்தம் செய்தது. இதன் மூலம் பரம்பிக்குளம் அணையை கேரளாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று கேரள அரசு திட்டமிட்டது. கேரள அரசு 2013 ஆம் ஆண்டு, பரம்பிக்குளம் அணைப் பகுதியில் வனக் காவல்நிலையத்தைத் திறந்து, கண்காணிக்கத் தொடங்கியது.

இந்நிலையில்தான் ஜனவரி 16 ஆம் தேதி, பரம்பிக்குளம் அணை மற்றும் துணை அணைகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளச் சென்ற தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அனுமதிக்காமல், கேரள வனத்துறை திருப்பி அனுப்பி இருக்கிறது. கடந்த ஓராண்டு காலமாக தமிழக அதிகாரிகளுக்கு கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியது.

கடந்த ஆண்டு வரையில் இந்த மூன்று அணைகளும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத்தான் மத்தியப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கேரள மாநில அரசும், அனைத்துக் கட்சிகளும் பரம்பிக்குளம் அணை தங்களுக்குத்தான் சொந்தம் என்று மத்திய அரசிடம் நியாயமற்ற கோரிக்கை வைத்தன.

கேரளாவின் நிர்பந்தத்திற்குப் பணிந்த மத்திய அரசு, தற்போது பரம்பிக்குளம் அணை மற்றும் துணை அணைகளான தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய மூன்றும் கேரளாவின் பொறுப்பில் உள்ளதாக அறிவிக்கை வெளியிட்டு உள்ளது.

மத்திய அரசின் இத்தகைய வஞ்சகமான துரோகத்தைத் தடுத்து நிறுத்தாமல் ஜெயலலிதா அரசு வேடிக்கை பார்த்ததன் விளைவாக, பரம்பிக்குளம் அணையை கேரளாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்ல அம்மாநில அரசு அடாவடி நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. இதில் ஜெயலலிதா அரசின் பொறுப்பற்ற தன்மையும் கண்டிக்கத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் கொள்ளளவு 15.5 டி.எம்.சி. ஆகும். ஆனால் பரம்பிகுளம் அணையின் கொள்ளளவு 17.5 டி.எம்.சி. ஆகும். பரம்பிகுளம் அணையைக் கைப்பற்றத் துடிக்கும் கேரளாவின் நோக்கம் நிறைவேறினால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 4.5 இலட்சம் ஏக்கர் பாசன நீர் ஆதாரமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

எனவே, கேரள அரசின் முயற்சியை முறியடிப்பதுடன், மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில்  பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளை தமிழ்நாட்டின் பொறுப்பில் உள்ளதாக திருத்தம் செய்து அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

-http://www.nakkheeran.in

TAGS: