எல்லை தாண்டும் இந்திய மீனவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கான சட்டம் 6 வாரத்திற்குள் அமல்படுத்தப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை மீனவர்கள் சங்கத்தை சேர்ந்த 3 பேர் தொடர்ந்த வழக்கு கொலும்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இலங்கை அரசு சார்பில் ஆஜரான அட்டனி ஜெனரல், எல்லை தாண்டும் இந்திய மீனவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிப்பது உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும்படி தங்களது துறைக்கு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு மீன்பிடி படகுகள் சட்டத்தை 6 வாரத்திற்குள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு வதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
இச்சட்டத்தின் படி எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன் ரூ. 7.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிகிறது. அபராத தொகை 30 நாட்களுக்குள் செலுத்த தவறினால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலம் விடப்பட்டு அபராத தொகை மற்றும் வழக்குச் செலவு தொகையை இலங்கை அரசு வசூலித்துக் கொள்ளும் புதிய சட்டத்தில் இடம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதும், இந்திய அரசின் தலையீட்டின் பேரில் அவர்களை விடுவிப்பதும் வாடிக்கையாக உள்ள நிலையில், கடுமையான தண்டனைகளை விதிக் கப்படும் சட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு தமிழக மீனவர்களடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-http://www.nakkheeran.in