சண்டிகர்: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும் இரு தீவிரவாதிகள் திரும்பி பாகிஸ்தானுக்கே ஓட்டம்பிடித்தனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படைத்தளத்தில் இரு வாரங்கள் முன்பு 6 தீவிரவாதிகள் ஊடுருவி சரமாரி தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்த நிலையில், 4 நாட்களுக்கு பிறகு, தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்ட பின்னர், விமானதளம் மீட்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் பெஷாவர் அருகே பல்கலைக்கழகம் ஒன்றிற்குள் புகுந்த தீவிரவாதிகள் 21 மாணவர்களை சுட்டு கொன்றனர். பாக். பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இதுபோன்ற தாக்குதல் பாணியை இந்தியாவில், அதுவும் பதன்கோட்டில் மீண்டும் நடத்தும் சதி திட்டத்தோடு, 3 தீவிரவாதிகள் பாக். நாட்டில் இருந்து, இன்று அதிகாலை, இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். பதன்கோட் அருகேயுள்ள தாஷ் கிராமத்திற்குள் அவர்கள் வந்தபோது, எல்லை பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை கண்டனர். உடனடியாக, தீவிரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவன் உயிரிழந்தான். மற்ற இருவரும் மீண்டும் பாகிஸ்தானுக்கே தப்பியோடிவிட்டனர். வட மாநிலங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவு உள்ளது. அதிகாலை வேளைகளில் பனிப்பொழிவின்போது, தூரத்தில் நடமாடும் நபர்களை கண்டுபிடிப்பது கஷ்டம். இந்த பனிப்பொழிவை பயன்படுத்தி தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவிக்கிறார்கள்.