தைவான் நாட்டில் நேதாஜி உடல் தகனம்.. இந்தியாவுக்கும் தெரியும்: இங்கிலாந்து வெப்சைட் அம்பலம்

Netaji_Subhas_Chandra_Boseலண்டன்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் உயிரிழந்தார் என கூறி அதற்கான ஆவணங்களை வெளியிட்ட இங்கிலாந்து இணையதளம் ஒன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது தொடர்பான தகவல்களையும் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்திய விடுதலைக்காக, வெளிநாடுகளில் இருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஆனால் நேதாஜி என்ன ஆனார் என்பது தெரியாமல் மர்மமாக மாறிவிட்டது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945ம் ஆண்டு ஆகஸ்டு 18ம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதை ஒருதரப்பினர் மறுத்து வந்தனர்.

அதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வந்தது. இந்த நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இறுதி நாட்களுடன் தொடர்புடைய ஆவணங்கள் என கூறி இங்கிலாந்தை சேர்ந்த இணையதளம் தகவல்களை வெளியிட்டு வருகிறது. www.bosefiles.info இணையதளத்தில் தைவானில் நேதாஜி விமான விபத்தில் இறந்தது உண்மைதான் என கூறி நேரில் பார்த்த சாட்சியங்களுடன் ஆதராங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் உடல் தகனம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் இணையதளத்தில் தற்போது இடம் பிடித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தைவான் புறநகர் பகுதியில் விமான விபத்தில் உயிரிழந்த நேதாஜி உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யும் அனுமதியை தைவான் அதிகாரி டான் டி-டி , உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்களை தைவான் போலீஸ் அதிகாரிகள் பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளனர். இந்த கோப்புகள், டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் மூலமாக இந்திய அரசுக்கு 1956ம் ஆண்டு அனுப்பி வைத்துள்ளது.

தைவானுக்கான பிரிட்டன் தூதர் ஆல்பர்ட் பிரான்கிளின் , சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு தைவான் அரசுக்கு மே 15, 1956ம் ஆண்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதற்கு பதிலளித்த தைவான் அரசு மாகாண தலைவர் சிகே யென், ஜூன் 27 -1956 தேதியிட்ட போலீஸ் அறிக்கையை அனுப்பியுள்ளார். இதில், போலீஸ் அதிகாரி டி-டி பேட்டியும் அடங்கியுள்ளது.

நேதாஜி உடல் தகனம் செய்யப்படும் பொழுது, உடன் இருந்த ஜப்பான் ராணுவ அதிகாரி ஒருவர், விமான விபத்தில் இந்திய தலைவர் இறந்ததை டி-டி யிடம் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகபோரின் போது, ராணுவ தளபதி என்ற அடிப்படையில் குடும்ப உறுப்பினர்கள் இல்லாமலே, ராணுவ மருத்துவமனையின் சான்றிதழ்கள் அடிப்படையில் உடல் தகனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் பிரான்கிளினிடம் யேன் தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிடவில்லை என்றாலும், சுபாஷ் சந்திரபோஸ் விவகாரத்தில் தான் இது நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: