ஜல்லிக்கட்டு தடையை நீக்க முடியாது.. சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

jalliடெல்லி: 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை, நீக்க வேண்டும் எனக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட 3 மறுசீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

2011ம் ஆண்டு, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால், காட்சிப்படுத்துதல் பட்டியலில் காளை சேர்க்கப்பட்ட நிலையில், 2014ம் ஆண்டு மே மாதம், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்கும் விதமாக கடந்த 7ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய அறிவிக்கையை வெளியிட்டது. ஆனால், அதற்கு தடை கோரி விலங்குகள் நல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

அதன் அடிப்படையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்கும் மத்திய அரசின் அறிவிக்கைக்கு, உச்சநீதிமன்றம் கடந்த 12ம் தேதி இடைக்கால தடை விதித்தது. இடைக்கால தடைக்கு எதிரான சீராய்வு மனுவை மறுநாளே தள்ளுபடியும் செய்தது.

எனவே, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து 2014ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, தடையை நீக்க வேண்டும் எனக் கோரி, ஜே.கே.ரித்தீஷ், ராஜசேகரன், பாரம்பரிய விளையாட்டு கழகம் ஆகியவற்றின் சார்பில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மூன்று மனுக்களும், நீதிபதிகள் கோபால் கவுடா மற்றும் பினாக்கி சந்திரகோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சீராய்வு மனுவை விசாரிக்க முடியாது என கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில், அதற்கான சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்வதுதான் இப்போது எஞ்சியுள்ள ஒரே வழியாக பார்க்கப்படுகிறது.

60 sec: 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை, நீக்க வேண்டும் எனக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட 3 மறுசீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில், அதற்கான சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்வதுதான் இப்போது எஞ்சியுள்ள ஒரே வழியாக பார்க்கப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: