கர்நாடகம் முழுவதும் 50 ஆயிரம் கன்னட திருக்குறள் நூல்கள் விநியோகிக்கத் திட்டம்

thirukkural-notes.2கர்நாடகம் முழுவதும் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்ட 50 ஆயிரம் திருக்குறள் நூல்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தார்.

 இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது: இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும். மனித குலத்துக்கான நற்செய்தியாக திருக்குறளை திருவள்ளுவர் வழங்கியுள்ளார். 2 ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த நூல் உயிர்ப்புடன் இருப்பதே அந் நூலின் பெருமையாகும்.

எனவே, திருக்குறளின் அருமை, பெருமைகளை கர்நாடகத்தில் வாழும் தமிழர், கன்னடர், தெலுங்கர், மலையாளிகள், மராத்தியர் உள்ளிட்ட அனைத்து மொழியினர் மத்தியிலும் பரப்ப முடிவு செய்துள்ளோம். முதல்கட்டமாக கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 50 ஆயிரம் திருக்குறள் நூல்கள் கர்நாடகத்தின் மாவட்ட தலைநகரங்களில் திருவள்ளுவர் விழா நடத்தி விநியோகிக்கப்படும். திருவள்ளுவரின் தத்துவங்களை பரப்ப அனைவரும் கைகோக்க வேண்டும் என்றார்.

-http://www.dinamani.com

TAGS: