எனது தந்தையின் அஸ்தியை டி.என்.ஏ சோதனை செய்ய வேண்டும்: நேதாஜியின் மகள் கோரிக்கை!

netaji_001டெல்லி: ஜப்பானின் ரெங்கோஜி கோவிலில் வைக்கப்பட்டுள்ள அஸ்தி தனது தந்தை நேதாஜி சுபாஸ் சந்திபோஸுக்கு உடையதுதானா என்பதை கண்டறிய, சாம்பலை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அனிதா போஸ் தெரிவித்துள்ளார்.

நேதாஜியின் இறப்பு குறித்த தகவல்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர்  தொடர்பான 100 கோப்புகளை மத்திய அரசு கடந்த இருதினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த நடவடிக்கைக்கு போஸ் குடும்பத்தினரும், ஆய்வாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இன்னும் வெளிவராமல் உள்ள பல முக்கிய கோப்புகள் வந்தால்தான் போஸ் தொடர்பான மர்மத்திற்கு நிரந்தரமாக விடை கிடைக்கும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜெர்மனியில் வசித்து வரும் அனிதா சுபாஸ் சந்திரபோஷ் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தைபேயில் 1945 ஆம் ஆண்டு நேதாஜி இறந்தாக சொல்லப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா? என கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் அளித்த பொருளாதார நிபுணரான அனிதா போஸ், “எனது தந்தையின் இறப்புக்கு அனேகமாக விமான விபத்து காரணமாக இருக்கலாம் என்றே நம்புகிறேன்.

நேதாஜியின் அஸ்தி டோக்கியோ நகரில் உள்ள ரெங்கோஜி புத்த கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள எலும்புகள் இன்னும் சேதமடையாத நிலையில்தான் இருக்கும். எனவே அதை மரபணு சோதனைக்கு உட்படுத்தி அங்கு இருப்பது எனது தந்தையின் அஸ்திதானா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்” என்றார். அடுத்த மாதம் இந்தியா வரும் அனிதா போஸ், இதுதொடர்பாக மத்திய அரசிடம் வற்புறுத்துவார் என்றும் கருதப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: