சட்டசபைத் தேர்தலில் லஞ்சம் வாங்காமல் வாக்களியுங்கள்… சகாயம் கோரிக்கை

sagayam-ias1சென்னை: அரசியலில் நேர்மையை கொண்டு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் சமூகத்தில் இருந்து தொடங்கவேண்டும். தூய சமூகத்தை, நேர்மையான சமூகத்தை கொண்டு வருவதன் மூலம் அரசியலில் நேர்மையை கொண்டு வரமுடியும் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. நிகழ்கால, கடந்த கால ஆட்சிகளால் ஏற்பட்ட அதிருப்திகளின் வெளிப்பாடுதான் ஐஏஎஸ் அதிகாரி ‘சகாயம்’ அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சென்னையில் பேரணி நடத்தினர்.

சகாயம் அரசியலில் ஈடுபட வேண்டும், சகாயம் முதல்வராக வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் பரவலாக வலுக்கத் தொடங்கி இருக்கிறது. சகாயத்துக்கு எப்போதும் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. நேர்மையான அதிகாரி என்ற அடையாளத்தோடு இரவு பகல் பாராமல் கடமையே கண்ணாக செயல்படுபவர் என்பதால் அவர் மீது வைத்திருக்கும் மதிப்பும், மரியாதையும் கூடிக்கொண்டே செல்கிறது.

தமிழ்நாட்டின் கெஜ்ரிவால் என்று சகாயத்தை சிலர் புகழ்பாடுகிறார்கள். இன்னொரு கக்கனாக சகாயம் அரசியலில் சாதிப்பார் என்று சொல்கிறார்கள். இளைஞர்களோ இவரை அரசியலுக்கு அழைப்பதில் மிகத் தீவிரமாக களத்திலும் இறங்கிவிட்டனர்.

இந்த நிலையில் ஒரு வீடியோ பேச்சை வெளியிட்டுள்ளார் சகாயம்.அதில் அவர் கூறியிருப்பதாவது: அரசியலில் நேர்மையை கொண்டு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் சமூகத்தில் இருந்து தொடங்கவேண்டும் தூய சமூகத்தை, நேர்மையான சமூகத்தை கொண்டு வருவதன் மூலம் அரசியலில் நேர்மையை கொண்டு வரமுடியும். உங்களின் ஆற்றல்கள் அனைத்தும் சமூகத்தை நோக்கி செல்லவேண்டும். உங்களின் ஆற்றலை சமூகப்பணிகளில் ஈடுபடுத்துங்கள். நாட்டின் பசுமைப்பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ள சகாயம், விவசாயிகளுக்குஆதரமான ஏரி குளங்களை பாதுகாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

நதிகளை பாதுகாப்பதன் மூலம், இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை தடுக்கமுடியும். ஏழை விவசாயிகளுக்கு படித்த நாம் உதவவேண்டும். நெசவாளர்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் உதவ முன்வரலாம் படித்த நாம் மக்களுக்கு உதவலாம் வழிகாட்டலாம்.

ஆக்கப்பூர்வமான சட்டத்திற்குட்பட்ட சமூக பணிகளை செய்யவேண்டும். 2016 சட்டசபை தேர்தலை கண்ணியமான தேர்தலாக நடைபெற நேர்மையாக வாக்களிக்க லஞ்சம் பெறாமல் வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அன்பிற்குரிய இளைஞர்களே ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு நான் துணையாக இருப்பேன் என்று கூறியுள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.

tamil.oneindia.com

TAGS: