தனியார் கல்வி பிடியில் தவிக்கும் மாணவர்கள்: தடுப்பது யார்? (வீடியோ இணைப்பு)

medicalcase_001பங்காரம் மருத்துவ கல்லூரி மாணவிகள் தற்கொலை, மாணவர்கள் சமுதாயத்தையும் மக்கள் சமுத்திரத்தையும் சமீபத்தில் ஆட்கொண்ட மிகப்பெரிய பயங்கரம்.

கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் உள்ள பங்காரம் பகுதியில் அமைந்துள்ளது, இயற்கை மருத்துவ யோகா கல்லூரி. அங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை.

பாடம் நடத்த ஒரே ஆசிரியர், படித்து முடித்தாலும் சான்றிதழ்கள் தராமல் தன்போக்கில் நடந்துள்ளது.

இதுபற்றி கல்லூரி நிர்வாகம், மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தும் பயனில்லை.

அதிலிருந்து விலக நினைத்தாலும் கொடுத்த 2 லட்சம் ரூபாய் பணத்தை திரும்பப்பெற முடியாமல், போராடி, மிரட்டப்பட்டு எதிர்காலத்தை நினைத்து விரக்தியடைந்து இறுதியில் பிரியங்கா, மோனிஷா, சரண்யா ஆகிய மூன்று மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலையே செய்துகொண்டனர்.

இது சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய செய்தி.

அங்கு படிக்கும் மற்ற மாணவிகளையும் இந்த விரக்தி விட்டுவைக்காது. கணக்கெடுத்தால் இதுபோல நூற்றுக்கணக்கான தரங்கெட்ட தனியார் கல்லூரிகள் தடைசெய்ய தக்கதாக இருக்கும்.

தனியார் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் தவறுகளால் மாணவர்கள் பலியானால் மட்டும் தமிழகம் அதிர்கிறது.

கண்டன கணைகள் பாய்கிறது. விசாரணைகள் விரைகிறது, விரிகிறது. நடவடிக்கைகள் கெடுபிடியாகிறது. அதை கண்டு, சட்டதிட்ட நேர்மை பற்றிய சிந்தனையில் அப்படியே சிறகடித்து மக்கள் மனம் பறக்கிறது.

அடுத்து வேறொரு பிரச்சனை அலை எழுந்துவிட்டால் போதும், பழைய பிரச்சனை படுத்துவிடுகிறது.

இவ்வாறு நடந்து வரும் பிரச்சனைகளை கண்டு, நொந்துவருவது நாட்டின் வழக்கமாகிவிட்டது.

சிலர் சம்பாதிக்க சீரழியும் கல்விமுறை

தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் பெற்றோர்கள் பணத்திலேயே நடத்தப்படுகிறது. மேலும், அவர்கள், பல கல்வி நிறுவனங்களை பெருக்கிக்கொள்ள அதிக லாபமும் அதில்தான் உறிஞ்சப்படுகிறது.

ஆனாலும், தொண்டுள்ளம் கொண்ட தாளாளர் பட்டங்களுடன் அதன் நிறுவனர்கள் வலம் வருகின்றனர்.

அரசு மேல்நிலை பள்ளிகள் வரவேண்டிய பல ஊர்களில், தனது செல்வாக்கால் தடுத்துவிடுகிறார்கள் தனியார் கல்வி எஜமான்கள்.

தனியார் கல்வி நிறுவனங்களால் சமுதாயத்தில் உள்ள பல பிரச்சனைகளை பட்டியலே போடலாம்.

தனியார் நிறுவனங்களுக்கு மாணவர்களின் எதிர்காலம் பற்றிய கவலையைவிட, அங்கு படிக்கிறபோது அதிக மதிப்பெண் பெறவைப்பதுதான் அதற்காக, மாணவர்கள் நலத்தையே சிதைக்கின்றனர். மதிப்பெண் ஆசையில் பெற்றோர்களும் அதை வழிமொழிகின்றனர்.

10 மற்றும் 12 ம் வகுப்புகளின் ஓராண்டு படிப்பையே இரண்டாண்டுகள் பயிற்சி கொடுத்து 9 மற்றும் 11 ம் பாடங்களை படிக்கவிடாமல் இருட்டடிப்பு செய்கின்றனர்.

இப்படி தந்திரமான குறுக்கு வழிகளே தனியார் கல்வியின் வெற்றிக்கு பின்னால் இருக்கிறது என்பதை அரசு அறிய வேண்டும்.

அரசுப் பள்ளிகளின் பலவீனமும் தனியார் பள்ளிகளுக்கு தாறுமாறான ஒரு விளம்பரம். தனியார் பள்ளிகள் இருக்கும் வரை அரசுப் பள்ளிகள் மாணவர்களையும் பெற்றோர்களையும் ஈர்க்காது.

கல்வி நிறுவனங்களை அரசு மட்டுமே நடத்துவதும். மதுக்கடைகளை அரசு, தனியார் இரண்டுமே நடத்தாததும். இப்போதைய அவசியமான அடிப்படை நிர்மாணங்கள்.

இதை நிறைவேற்ற துணிந்தால், உன்னத வழிகள் உதயமாகும். அதற்கான நடவடிக்கைகளில் நல்ல உப மாற்றங்களும் சாதகமாகும்.

-மருசரவணன்.

-http://www.newindianews.com

TAGS: