ஊழலை ஒழிக்க சகாயம் அரசியலுக்கு வர வேண்டும்: ஒரே போடாக போட்ட பழ.கருப்பையா

sagayamசென்னை: நேர்மையான அதிகாரி சகாயம் போன்றோர் அரசியலில் ஈடுபட்டு ஊழலை ஒழிக்க வேண்டும் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பழ.கருப்பையா வேண்டுகோள்விடுத்தார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அக்கட்சி எம்.எல்.ஏ பழ.கருப்பையா நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நேற்று இரவு அறிவித்தார். இதனிடையே இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா தனது துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

ஊழல் குறித்து நீண்ட நேரம் அவர் பேட்டியளித்தார். அதிகாரிகளிடம்தான் பணத்தை செலவு செய்யும் பொறுப்பு இருக்கிறது என்றும், எனவே, அரசியல்வாதிகளோடு சேர்ந்து கொண்டு, அதிகாரிகள் பணத்தை சுருட்டி, இயற்கை வளத்தை சுரண்டி வருவதாக பழ.கருப்பையா குற்றம்சாட்டினார்.

அதேநேரம், ஒரு சில நல்ல அதிகாரிகளும், தமிழ்நாட்டில் இருப்பதாக பழ.கருப்பையா சுட்டிக்காட்டினார். அதில் ஒருவர்தான் சகாயம் எனவும், கருப்பையா புகழாரம் சூட்டினார்.

“எனக்கு தெரிந்து, இரு நல்ல அதிகாரிகளை தமிழகம் பார்த்துள்ளது. அதில் ஒருவர் உமா ஷங்கர். சுடுகாட்டு ஊழலில் அமைச்சரையே வீட்டுக்கு அனுப்பியவர். மற்றொரு நல்ல அதிகாரி சகாயம்.

சகாயம், சுடுகாட்டில் போய் படுத்துக்கிடந்து ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர். அவரைப்போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்” என்று பழ.கருப்பையா வேண்டுகோள்விடுத்தார். அதேநேரம், பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வர வேண்டாம் என சகாயம் நினைத்துக்கொண்டிருக்கலாம் என்றும் கருப்பையா யூகம் தெரிவித்தார்.

“சகாயம் ஒரு நேர்மையான அதிகாரிதான். ஆனால், அதிகாரி என்ற பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே வந்து அரசியலில் ஈடுபட அவர் தயங்கலாம் என தெரிகிறது. அவரிடம் எனக்கு அதிக பழக்கம் இல்லாததால் அதுகுறித்து தெரியவில்லை” என்றார் கருப்பையா. சகாயத்தை அரசியலுக்கு வருமாறு அழைப்பீர்களா என்ற நிருபர்களின் கேள்விக்கு, அவர்தான் வர மாட்டேன் என்கிறாரே என்றார் சிரித்தபடி.

tamil.oneindia.com

TAGS: