திருச்சி: அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் என்பது, மக்களின் பொதுவான கோரிக்கையாக உள்ளதாக மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பாடகர் கோவன் தெரிவித்துள்ளார்.
பாடகர் கோவன் தமிழக அரசுக்கு எதிராக மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை பாடி, சில மாதங்களுக்கு முன்பு புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், அரசு மதுபானக் கடைகளை மூடக்கோரும் மாநாடு பாடகர் கோவன் தலைமையில் வரும் 14 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்கான வாகனப் பிரச்சாரத்தை கோவன் நேற்று தொடங்கினர். அப்போழுது, செய்தியாளர்களை சந்தித்த அவர், திருச்சி மாநாட்டில் மதுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு கட்சியிலிருந்து தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.
மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்பது மக்களின் பொதுவான எதிர்பார்ப்பு என்றும் டாஸ்மாக்கை மூட உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இந்த மாநாட்டில் வலியுறுத்தப்படும் என்றும் மதுக்கடைகளை மூடுவதற்கு இந்த மாநாடு தொடக்கமாகவும், இறுதி மாநாடாகவும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.