இந்தியாவில் இருக்கும் 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளில், 45 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் (ஐஏஆர்ஐ) வெள்ளிக்கிழமை நடைபெற்ற 54ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:
கடந்த 2013-2014ஆம் நிதியாண்டில், விவசாயத் துறையில் 265 மில்லியன் டன் விளைச்சல் இருந்தது. இது, கடந்த 2014-2015ஆம் நிதியாண்டில் 253 மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டது. 12 சதவீதம் அளவுக்கு மழை குறைவாகப் பெய்ததால்தான், விளைச்சல் குறைந்தது.
இதேபோல், இந்த ஆண்டிலும் நம் மீது இயற்கை அன்பு காட்டவில்லை. வறண்ட தட்பவெப்ப நிலையைத் தொடர்ந்து, பருவமழையும் குறைவாகவே பெய்தது. இதனால், தொடர்ந்து 2ஆவது ஆண்டாக விளைச்சல் இந்த ஆண்டும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது மிகவும் கவலையளிக்கக் கூடிய விஷயமாகும். உலகளாவிய பருவநிலை மாற்றம்தான் இந்தப் பிரச்னைகள் உருவாவதற்கு காரணமாகும்.
இந்தச் சவாலை எதிர்கொள்ளவும், ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட பருவநிலைக்கு ஏற்ற வகையிலும் இந்திய விவசாயத் துறையை மாற்றியமைக்க இந்திய விவசாய ஆராய்ச்சி கல்வி நிறுவனம் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதற்காக பையோ டெக்னாலஜி, நேனோ டெக்னாலஜி, சிந்தெடிக் பயாலஜி, சென்சார் டெக்னாலஜி, ஜியோ-ஸ்பாடியல் டெக்னாலஜி போன்ற அறிவியல் தொழில்நுட்பங்களை இந்திய விவசாய ஆராய்ச்சி கல்வி நிறுவனம் பயன்படுத்த வேண்டும்.
பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்து இந்தியா தற்போது இறக்குமதி செய்து வருகிறது. எதிர்காலத்தில் இந்தியாவில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெயின் தேவை மேலும் அதிகரிக்கும். இந்தப் பிரச்னைக்கு, இந்திய விவசாய ஆராய்ச்சி கல்வி நிறுவனம் தன்னிடம் இருக்கும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தீர்வு காணும் என்று நம்புகிறேன்.
இந்தியாவில் இருக்கும் 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் 45 சதவீதம் பேர், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலருக்கு வைட்டமின்-ஏ சத்து குறைபாடு உள்ளது. குழந்தைகளின் சத்து குறைபாட்டுப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, புரதச் சத்து, நுண்ணூட்டச் சத்து கொண்ட உணவு தானியங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன.
புரோ-வைட்டமின் ஏ சத்து கொண்ட “கோல்டன் ரைஸ்’ என்னும் அரிசி, தரம் வாய்ந்த மக்காச்சோளம், இரும்புச் சத்து கொண்ட கோதுமை, கம்பு, பருப்பு வகைகள் போன்றவற்றை இந்திய விவசாய ஆராய்ச்சி கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த தொழில்நுட்பங்கள், விவசாயிகளையும் சென்றடைய வேண்டும். அப்போதுதான் அவர்களால் மேற்கண்ட சத்துமிக்க உணவு தானியங்களை உற்பத்தி செய்ய முடியும் என்றார் பிரணாப் முகர்ஜி.
விழாவில், கோதுமை, கடுகு ஆகியவற்றில் இந்திய விவசாய ஆராய்ச்சி கல்வி நிறுவனம் உருவாக்கிய 13 புதிய ரகங்களை அவர் வெளியிட்டார். மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
-http://www.dinamani.com