32 ஆண்டுகளில் 879 பேரை பலிவாங்கிய சியாச்சின்

siachen1ஸ்ரீநகர்: இமயமலை பகுதியில் உள்ள சியாச்சினில், கடந்த, 32 ஆண்டுகளில், 879 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இமயமலையில் அமைந்துள்ள பனிப் பிரதேசமான சியாச்சினில், இந்திய ராணுவ முகாம் உள்ளது. கடந்த வாரம், இப்பகுதியில் திடீரென ஏற்பட்ட மோசமான பனிச் சரிவில் சிக்கி, தமிழகத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட, 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து, 1984க்கு பின், 879 ராணுவ வீரர்கள், சியாச்சினில் பலியாகி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மோசமான பனிப்பொழிவு:

*சியாச்சினில், குளிர்கால வெப்பநிலை, மைனஸ் 50 டிகிரி செல்சியஸ்

*இங்குள்ள பனிப்பாறைகள் உருகி ஓடும் தண்ணீர், லடாக்கில் உள்ள நுாப்ரா நதியின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது

*சியாச்சினில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாமுக்கு தேவையான பொருட்களை வினியோகிக்க, ஒரு நாளைக்கு, 6.8 கோடி ரூபாய் செலவாகிறது

*இந்த நிதியில், ஓர் ஆண்டில், 4,000 உயர்நிலைப் பள்ளிகளை கட்ட முடியும்

*இரண்டு ரூபாய் மதிப்புள்ள ரொட்டியை, சியாச்சினுக்கு எடுத்துச் செல்ல, 200 ரூபாய் செலவாகிறது

*கடந்த, 1984ல், சியாச்சினை, பாக்., ராணுவம் ஆக்கிரமிக்க முயன்றபோது, இந்திய ராணுவம் அங்கு சென்று, நிரந்தர முகாமை அமைத்தது.

அல்லல்படும் ராணுவம்:

*கடந்த, 1984 முதல், 879 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்; அவர்களில் 33 பேர் அதிகாரிகள்

*இவர்களில் பெரும்பாலானோர், பனிச்சரிவு, ஆக்சிஜன் பற்றாக்குறை, பனியால் ஏற்படும் நோய் போன்றவற்றால் இறந்துள்ளனர்

*சியாச்சின், கடல் மட்டத்திலிருந்து, 18 ஆயிரம் அடி உயரத்தில் இருப்பதால், மனித உடல், தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகிறது

*டியூபில் உள்ள பற்பசை, உறைந்து போய் விடுகிறது; பேச்சு குழறல் ஏற்படுகிறது

*சுவாசக் கோளாறு, தலைவலி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உண்டாகின்றன

*ஹெலிகாப்டர் மூலமே, வீரர்களுக்கு தேவையான பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

-http://www.dinamalar.com

TAGS: