ராமேஸ்வரம், இலங்கை இடையே கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை

ramarpaalamலக்னோ: ராமேஸ்வரம், இலங்கை இடையே கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து போக்குவரத்துக்கு திறந்துவிடும் திட்டம் உள்ளதாக மத்திய கப்பல், தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:நதிகளை போக்குவரத்து மார்க்கமாக மேம்படுத்துவதே மத்திய அரசின் இலக்காகும். கங்கை, பிரம்மபுத்ரா உள்பட 5 நதிகளில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுபோன்று 111 நதிகளில் போக்குவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். வங்கதேசம், மியான்மருக்கு நதிகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது. தண்ணீரிலும் ஓடி பறக்கும் திறன் கொண்ட விமானங்கள் மூலம் வாரணாசி-கொல்கத்தா இணைக்கப்படும். இது மற்ற போக்குவரத்துகளை விட செலவு குறைவானது.

620 கிலோ மீட்டர் தூரமுள்ள பராக்கா- பாட்னா நீர் வழிப்பாதை திட்டம் அடுத்த 6 மாதங்களுக்குள் முடிவுறும். இந்தியாவின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் இருந்து இலங்கைக்கு கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து சாலை போக்குவரத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் மாசுப்படுவதை தடுக்க, மின்சக்தியில் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள், பேருந்துகள், கார்கள் இரண்டு ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இவற்றில் செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகளில் பயன்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். 5 ஆண்டுகளில் கங்கை தூய்மைப்படுத்தப்படும். தூய்மையான, சுத்தமான கங்கை நதி என்பதுதான் பிரதமர் மோடி அரசின் கனவாகும். ஓட்டுனர் உரிமம், வாகனப் புகை உமிழும் அளவு சான்றிதழ்களை வழங்க 5,000 மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் ஓரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

-http://www.dinakaran.com

TAGS: