தென்சீனா கடலில் இந்தியா- அமெரிக்கா கூட்டு ரோந்து? சீனா கடும் எச்சரிக்கை

indchiபெய்ஜிங்: தென்சீனா கடற்பரப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு ரோந்து மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதற்கு சீனா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்சீனா கடற்பரப்பு முழுவதும் தமக்கே சொந்தம் என்கிறது சீனா; ஆனால் வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே, தைவான், மலேசியா நாடுகள் தங்களுக்கும் சொந்தமானது என உரிமை கொண்டாடி வருகிறது.

இருப்பினும் சீனா ராணுவ பயன்பாட்டுக்காக 2 செயற்கையான தீவுகளை உருவாக்கியுள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அவ்வப்போது தென்சீனா கடலில் ரோந்து வருகிறது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளையும் கூட்டு சேர்ந்து கொண்டு ரோந்து மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்தியாவோ, ஐநாவின் கீழான பன்னாட்டு ராணுவத்தில் மட்டுமே சேருவோம் என மறுத்து வருகிறது.

இந்த செய்திகள் வெளியான நிலையில் சீனா கடும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இது தொடர்பாக சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ கூறியதாவது:

தென்சீனா கடற்பரப்புக்கு தொடர்பே இல்லாத நாடுகள் இப்பிராந்தியத்தை ராணுவமயமாக்குவதை நிறுத்த வேண்டும். சுதந்திரமான போக்குவரத்து என்ற பெயரில் இப்பிராந்திய நாடுகளின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது. இது இந்த பிராந்தியத்தின் அமைதிக்கு வேட்டுவைப்பதாகும். இவ்வாறு ஹாங் லீ கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: