ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு பிரிட்டன் எம்.பி. வலியுறுத்தல்

Kashmir-Mapபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ஜான் பிளாக்மேன் தெரிவித்தார்.

 சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியை இந்தியாவிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஜம்முவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து ராபர்ட் ஜான் பிளாக்மேன் கூறியதாவது:

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதில் இருந்தே, நாட்டை பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் வலிமை மிக்கதாக உருவாக்க முயன்று வருகிறார். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பிரிட்டன் அரசு தயாராக உள்ளது. மோடி பிரதமரான பிறகு இந்தியா – பிரிட்டன் இடையேயான நல்லுறவு மேம்பட்டு வருகிறது. பாகிஸ்தான் மண்ணிலிருந்து ஏவப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதத்தைப் பரப்பும் சக்திகளை வேரறுப்பது அவசியம். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுடன் தோளோடு தோள் நின்று பிரிட்டன் ஒத்துழைக்கும். ஜம்மு-காஷ்மீரை முன்னர் ஆண்ட அரசர், அந்தப் பகுதியை இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.

ஆனால் அந்த மாநிலத்தின் ஒரு பகுதியை பாகிஸ்தான் தற்போது சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். எனவே, ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதிகளை இந்தியாவிடமே பாகிஸ்தான் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றார் அவர்.

-http://www.dinamani.com

TAGS: