குலுங்கும் கும்பகோணம்… மனித வெடிகுண்டு மிரட்டலால் பாதுகாப்பு பணியில் 20000 காவல்துறையினர் !

mahamahamகும்பகோணம்: மகாமகத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி இன்று நடைபெறுவதால், கும்பகோணத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பாதுகாப்பு பணியில் சுமார் 20ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது கும்பகோணம் மகாமக திருவிழா. குரு சிம்மராசியில் இருக்கும்போது மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி வரும் நாள் மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் மகாமக குளத்தில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.

கும்பகோணத்தில் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது. உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மகாமகக் குளத்தில் நீராட வந்து செல்கின்றனர். இதுவரை சுமார் 20 லட்சம் பேர் மகாமகக் குளத்தில் புனித நீராடியதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி இன்று நடைபெறுகிறது. இந்த நாளில் மகாமக குளத்தில் புனித நீராடுவது, 12 கும்பமேளாவில் புனித நீராடியதற்கும், 108 ஆண்டுகள் காசியில் வாழ்ந்து கங்கையில் தினமும் நீராடியதற்கும் சமம் என்று கருதப்படுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கும்பகோணத்தில் குவிந்து வருகின்றனர்.

இன்று ஒருநாளில் மட்டும் கும்பகோணத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 10 ஆயிரம் போலீசார் கும்பகோணத்திற்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். போலீசார் மட்டுமின்றி என்.சி.சி., – என்.எஸ்.எஸ்., மாணவர்களும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.

மனித வெடிகுண்டு மிரட்டல்: முன்னதாக கும்பகோணம் மகாமகத் திருவிழாவை சீரழிக்கும் வகையில், 4 மனித வெடிகுண்டுகள் குளத்தைச் சுற்றி வருவதாகக் குளக்கரையில் தாற்காலிகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மக் கடிதம் வந்தது.

இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை காலை முதல் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸார் தீவிர சோதனையிட்டு வருகின்றனர். இந்தப் பணியில் சுமார் 150 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மகாமகக் குளத்தைச் சுற்றிலும் உள்ள மண்டபங்கள், கரையில் நிற்கும் வாகனங்கள், பொருள்களில் வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.

இது மட்டுமின்றி மகாமகக் குளப் பகுதியில் இரு மோப்ப நாய்களும் சோதனைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையத்திலும் நவீன கருவிகள் மூலம் போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மருத்துவ முகாம்: பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன. இதில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் பணியில் உள்ளனர். வெளியூர்களில் இருந்து தீர்த்தவாரிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே இலவச உணவுகளும், குடி தண்ணீரும் வழங்கப்படுகிறது.

கடந்த 1992ம் ஆண்டு நடந்த மகாமகத் திருவிழாவின் போது ஏற்பட்ட மக்கள் நெரிசலில் சிக்கி 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எனவே, அசம்பாவிதங்களைத் தடுக்க அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: