“”எண்ணெய் வைக்காத பரட்டைத் தலை… வெள்ளந்தியான கிராமத்து முகம்… அதில் பார்த்தாலே தெரியும்படி படர்ந்திருக்கும் வறுமைக் கோடுகள். இத்துடன் அவர்கள் தமிழ் மொழியிலும் பேசிக்கொண்டிருந்தால் சந்தேகமே இல்லை அவர்கள்தான் செம்மரக் கடத்தல் கொள்ளையர்கள்…” இதுதான் செம்மரக்கடத்தல் கொள்ளையர்களைப் பிடிக்க காலந்தோறும் ஆந்திர காக்கிகளும், வனத்துறையும் கடைப் பிடித்து வரும் எழுதப்படாத சட்டம். குற்றத் தைச் செய்தவர்களை பிடிப்பதற்குப் பதிலாக யாரோ ஒருவரை கைது செய்து, குற்ற வழக்கை முடித்து வைக்கும் ஆந்திர காக்கிகளின் சட்ட விரோத ‘விசாரணை’ பாணிக்கு பலத்த குட்டு வைத்துள்ளது திருப்பதி ஜே.எம்.3 நீதிமன்றம்.
“2013 டிசம்பர் மாதம் 15-ந் தேதி. ஆந்திர மாநிலம் சேஷாசலம் காட்டில் வனத்துறை அதிகாரிகளான டேவிட்கருணாகரன், ஸ்ரீதர் உட்பட 4 பேர் ரோந்து சென்றனர். கஞ்சிபண்டா என்கிற பகுதியில் செம்மரம் வெட்டும் கும்பல் ஒன்று செல்வதைக் கண்டதும் துப்பாக்கியை நீட்டியபடியே’ அவர்களை நோக்கி ஓட… ‘சுட வருவதாகப்’ பயந்த மரம் வெட்டுபவர்கள் கற்களைக்கொண்டு அதிகாரிகள் மீது வீசினர். இந்தக் களே பரங்களின் உச்சமாக சம்பவ இடத்தி லேயே டேவிட்கருணாகரன், ஸ்ரீதர் என்கிற இரண்டு அதிகாரிகள் பலியாக… மீதி இரண்டு பேர் ரத்தக் காயங்களோடு தப்பினர். அதிகாரிகளின் மரணம் ஆந்திராவை அதிர வைக்க, சித்தூர் மாவட்டத்தின் அப்போதைய காவல்துறை கண்காணிப்பாளர் ராஜசேகரபாபு சிறப்பு டீம் அமைத்தார். ‘வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கல்லாத்தூரை சேர்ந்த கோவிந்தராஜுலு, சவுடன்காளி, கில்லனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி (எ) சாதுவை இந்த வழக்கில் கைது செய்த அந்த டீம் அதன்பின் பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக சுற்றித் திரிந்து இறுதியாக சித்தூர், காளஹஸ்தி, திருப்பதி பஸ் ஸ்டாண்டில் தரிசனத் திற்காக காத்திருந்த 435 பேரை பிடித்துவந்து, “இவர்கள்தான் அதிகாரிகளைக் கொன்றவர்கள்’ என்று ஊடகங்கள் முன் குற்றவாளிகளாக காட்டி யது. 356 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப் பட்டதில் 267 பேர் ஒன்றுமறியாத தமிழர்கள். இதை விசாரித்த நீதிபதி ராம்பாபு, “”ஆந்திர போலீசாரின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்கிறேன்” என வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பளித்துள்ளார்.’
“”அய்யா எங்க நெஞ்சுல பால வார்த்தீங்க…” நீதிமன்றத்தில் குழுமியிருந்த உறவினர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்க… இவர்கள் விடுதலைக்காக தொடக்கத்தில் இருந்தே போராடிவரும் மக்கள் கண்காணிப்பகத்தின் ஆசீர்வாதத்திடம் பேசினோம்.
“”பாதிக்கப்பட்ட சிறைவாசிகளிடம் நாங்கள் பேசியபோது, “நாங்கள் செங்கல் சூளை வேலைக்காக வந்தோம், கோயிலுக்கு வந்தோம். எங்களைப் பிடித்து வந்து மரம் வெட்டியதாக கேஸ் போட் டுட்டாங்க’’என்றும், “எனக்குப் பொறந்த கொழந்தை யைக்கூட பார்க்கவிடாம சித்ரவதை செய்யுது ஆந்திர போலீஸ்’’என்றும் பலர் புலம்பினார்கள். வெளியே உள்ள அவர்கள் மனைவி, குடும்பத்தின ரோ “எங்க ஊட்டுக்காரரை பார்க்கவிடாம எங்கள அலைக் கழிச்சாங்க. கேசுக்கு இடைஞ்சல் செஞ்சா உங்களை புடிச்சு வேற கேஸ்ல உள்ள தள்ளிடுவோம்னு மிரட்டுனாங்க’ என்று கதறினார்கள்.
“சிறைவாசிகளில் பெரும்பாலா னோர் விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை, ஜவ்வாது மலையைச் சேர்ந்தவர்கள். பொரு ளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய இம்மக்களின் வறுமையை பயன் படுத்தி தங்கள் வழக்குகளை முடித்துக்கொள்ள பார்த்தது ஆந்திர காவல்துறையும், வனத் துறையும். ஆனால் எங்களின் தொடர் சட்ட போராட்டத்திற்கு இறுதியாக கிடைத்த வெற்றியே இந்த விடுதலை தீர்ப்பு” உற்சாகமாக பேசிய ஆசீர்வாதம் தொடர்ந்து, “”ஆனாலும் விடுதலை செய்யப்பட்டவர்களை கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்றார்கள். இதைப் பார்க்கும் போது, அவர்களது கோபம் இன்னும் தணியவில்லை என்பது தெரிகிறது. இனி அந்தக் கோபத்தை சிறை யில் வேறு வழக்குகளில் உள்ள அப்பாவி தமிழர்கள் மீது காட்டுவார்கள். இதை நாம தடுக்க முயற்சிக் கணும்” என்றார் அக்கறையோடு ஆசீர்வாதம்.
“இரண்டு பேர் கொண்ட சட்ட உதவிக்குழு நியமித்ததும், பிரதமர் மோடிக்கு அம்மா எழுதிய கடிதமும்தான் தமிழர்கள் விடுதலைக்கு காரணம்’ என ர.ர.க்கள் பெருமை பட்டுக்கொள்ள… “இந்த விடுதலைக்கும் ஆளும் கட்சிக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை… விடுதலைக்கு முழுகாரணம் தளபதி அமைத்த சீனியர் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ டீம் எடுத்த முயற்சியே’’என்கின்றனர் உ.பி.க்கள். தி.மு.க. அமைத்த 25 வழக்கறிஞர்கள் கொண்ட குழுவில் சென்ற வழக்கறிஞர் எம்.கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.
“”28-10-15 இல் விழுப்புரத்தில் நமக்கு நாமே கூட்டத்தின் போது தளபதி ஸ்டாலினை சந்தித்த கல்வராயன்மலையைச் சேர்ந்த 77 குடும்பத்தினர், சட்டவிரோத சிறை குறித்து தங்கள் துயரத்தைப் பகிர்ந்துள்ளனர். இதைக்கேட்டதும் உடனே அவர்களுக்கு உதவ சட்ட உதவிக் குழு அமைத்தார் தளபதி. இதையொட்டி நான், வி.நன்மாறன், எம்.ஜெயகணேஷ், எஸ்.சிவசுப்ரமணியம் உட்பட்ட வழக்கறிஞர்கள் கல்வராயன் மலையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திச்சோம். அப்போதுதான் ஏற்கனவே “என் கணவன் விடுதலையாக உதவிசெய்யுங்கள்’’ என தனித் தனியாக அவ்வூர் மக்கள் முதல்வர் தனிப் பிரிவுக்கு மனு அளித்த விஷயம் தெரிந்தது. அந்த மனுவுக்கு தமிழக அரசிடமிருந்து “வெளிமாநில சிறையில் இருக்கும் விசாரணை சிறை வாசிகளை பிணையில் விடுதலை செய்திட தமிழ் நாடு சிறை விதிகளில் இட மில்லை. இது தொடர்பாக ஆந்திர மாநில இலவச சட்ட உதவி மையத்தை தொடர்புகொள்ளுங்கள்’’ என்று 22-7-15 அன்று பதில் வந்தது. இதுதான் பாதிக்கப்பட்ட தமி ழர்களுக்கு ஒரு மாநில அரசு காட்டும் அக்கறையா?
தி.மு.க. இந்த விஷயத்தை கையில் எடுத்த பின்தான் அவசர அவசரமாக இரண்டுபேர் கொண்ட சட்ட உதவிக் குழுவை அமைத்து, அதற்கு எட்டு லட்சம் நிதியையும் ஒதுக்கியது அரசு. நாங்கள் இவ்வழக்கை கையிலெடுத்த சமயம் ஏறக்குறைய வழக்கு முடியும் தருவாய்க்கு வந்துவிட்டதால் வழக்கில் இணையாமல் சட்ட உதவிகளை மட்டும் செய்தோம். தொடக்கத் தில் பிரிவினை கண்ணோட் டத்தோடு இவ்வழக்கில் ஆந்திர சிறைவாசிகளுக்கு ஜாமீன் கொடுத்தவர்கள் தமிழர்களுக்கு தரவில்லை. மேலும் சிறைவாசி களுக்கு அவர்களின் மொழி புரியாமல் இருந்தது. அவர்களுக்கு இவ்வழக்கின் தன்மையை விளக்கி யும் பக்கபலமாக இருந்தும் உதவி னோம்” என்றார் கடமையுணர் வோடு.
மேலும் இதேபோல சட்ட விரோதமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் ஆந்திர சிறையில் தவிச்சிக்கிட்டி ருக்காங்க” என்கின்றனர் மனித உரிமை இயக்கத்தினர் வேதனை யுடன்.
கடல் என்றாலும் காடு என்றாலும் தமிழன் மீதான கொடூரங்கள் தொடர்கின்றன.
-து. ராஜா
சே.த.இளங்கோவன்
-http://www.nakkheeran.in