டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தாண்டு மட்டும் இதுவரை 57 விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துள்ளதாக மத்திய வேளாண் இணை அமைச்சர் மோகன்பாய் குண்டரியா மக்களவையில் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.
உலக அளவில் நடைபெறும் விவசாயிகள் தற்கொலையில் 17 சதவீதம் இந்தியாவில் நிகழ்கிறது. விவசாயிகள் தற்கொலையில் மகாராஷ்டிர மாநிலம் முன்னிலை வகிக்கிறது. அங்கு தினமும் 7 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் மோகன்பாய் குண்டரியா எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார். அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரையில் 57 விவசாயிகள், வேளாண் துறை சார்ந்த காரணங்களுக்காக தற்கொலை செய்திருப்பதாக தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக இதுவரை தகவல் இல்லை என்றும் அவர் கூறினார். மக்களவையில் அவர் தாக்கல் செய்த தரவுகளின்படி, கடந்த ஆண்டு 10 மாநிலங்களில் 1690 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 725 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் 449 பேரும், தெலுங்கானாவில் 342 பேரும், கர்நாடகாவில் 107 பேரும், ஆந்திராவில் 58 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.