சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பித் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் அகதிகள் என்று அடைமொழியிட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்தது மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்.
அவர்களை க்யூ பிரிவு காவலர்களும், வருவாய் அதிகாரிகளும் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளைப் போலவே நடத்துவது, பிக் பாக்கெட், வழிப்பறி செய்தார்கள் போன்ற இல்லாத, சொத்தையான காரணங்களைக் கூறியும், காரணங்கள் ஏதுமில்லையெனும் நிலையில் அயல் நாட்டவர் சட்டத்தின் கீழும் சிறப்பு முகாம்கள் என்றழைக்கப்படும் தனிமைச் சிறைக்கூடங்களில் அடைப்பது, முகாம்களில் வாழும் பெண்களைப் புணர்ச்சிக்கு அழைப்பது, அவர்கள் எதிர்க்கும்போது, உங்கள் அண்ணன், தம்பிகளைச் சிறப்பு முகாம்களில் அடைத்துவிடுவோம் என்று மிரட்டுவது, முகாம்களை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்க மறுப்பது, உண்மையான காரணங்களால் மாலை 6 மணிக்குள் வரத்தாமதமானால் தண்டனையளித்து, கீழ்த்தரமாக நடத்துவது என்று வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கியூ பிரிவினரின் அராஜக நடவடிக்கைகள் சொல்லி மாளாதவை. இவர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத காரணத்தினால்தான் கடலில் செத்தாலும் பரவாயில்லை என்று அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குத் தப்பிச் செல்கிறார்கள் நம் உறவுகள்.
நேற்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வாழும் ரவீந்திரன் தன் மகனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வரதாமதமானதால் ஆய்விற்கு வந்த வருவாய் ஆய்வாளர் மிகவும் கீழ்த்தரமாக நடத்தி கடுஞ்சொல் பேசி உதவித்தொகை தரமறுத்து மிரட்டியிருக்கிறார்.
அதிகாரியின் மிரட்டலால் மனம் ஒடிந்த இரவீந்திரன் மின்சாரக் கோபுரத்தில் ஏறிக்குதித்துத் தன்னுயிரை மாய்த்திருக்கிறார். தன் மகனை மருத்துவமனையில் அனுமதிக்கச் சென்றேன் என்ற பிறகும் கீழ்த்தரமாக வசைபாடி நடவடிக்கை எடுக்க முனைந்த வருவாய் ஆய்வாளரின் மனிதாபிமானமற்ற செயல் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது தற்கொலை அல்ல கொலை. உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளிய வருவாய் ஆய்வாளரை தமிழக அரசு பணி நீக்கம் செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரவீந்திரனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் உடனே வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுகொள்கிறேன்.
ஈழத்தில் போர் முடிந்த பிறகு அங்கே மக்கள் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போலவே, இங்கு அகதிகள் முகாம் என்ற பெயரில் இவ்விதமான கொடுமைகள் தொடர்வது தாயக தமிழகத்திற்கும், இங்கு வாழும் 8 கோடி தமிழர்களுக்கும் பெருத்த தலைக்குனிவு ஆகும்.
இந்தியாவின் நான்கு பக்கமுமிருந்தும் அகதிகளை அனுமதிக்கும் இந்திய அரசு வங்காள தேச அகதிகளை நடத்துவது போல, திபத்திய அகதிகளுக்குக் கொடுக்கும் சலுகைகள் போல ஈழத்தமிழ் சொந்தங்களை நடத்துவதில்லை. ஈழத்தமிழர்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களை நடந்ததும் போக்கு மிகக்கொடுமையானது.
டெல்லியிலும் கொல்கத்தாவிலும் இருக்கும் வங்காள தேச முகாமும் பெங்களூரில் இருக்கும் திபத்திய முகாமும் பூமியின் சொர்க்கம் போல இருக்கின்றன ஆனால் தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம் மக்கள் வாழவே முடியாத சூழலில் இவ்வரசுகள் வைத்திருக்கிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்களை அந்நாடுகளின் அரசுகள் மனிதாபிமானத்துடன் நடத்துகின்றன. அகதிகளுக்கான உதவித்தொகை, சலுகைகள், கல்வி கற்க வசதிகள், தொழில் செய்ய வசதிகள் செய்கின்றன. கனடா போன்ற நாட்டில் 3 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலே குடியுரிமை வழங்கப்படுகிறது. பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைத் தங்களது ஆதித் தாயகம் எனக் கருதி தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்களைத் தாய்த் தமிழகம்தான் கொடுமைப்படுத்துகிறது, அலட்சியப்படுத்துகிறது. அதற்குக் காரணம் இதுவரை தமிழகத்தைத் திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆண்டிருந்தாலும் அவ்வாட்சிகள் ஈழத்தமிழ் சொந்தங்களை நடத்தும் விதம் ஒரே மாறியானவைதான். அதனால் தான் அவர்களுக்குக் கீழ் இயங்கும் அதிகாரிகளும் அதே மனபோக்குடன் நடந்துகொள்கிறார்கள்.
வந்தவரை எல்லாம் வசதியாக வாழவைத்த தமிழகம் தன் சொந்தவரை சாகடிப்பது அவமானகரமானது. இந்த நிலை விரைவில் துடைத்தெறியப்படும். தற்பொழுதுள்ள ஈழ அகதிகள் முகாம்களின் நிலையைச் சீர்திருத்தப்படுவது, முகாம்களில் வாழும் உறவுகளுக்கு இரட்டைக் குடியுரிமை அளிப்பது, உலகளாவிய அகதிகள் ஒப்பந்தங்களில் இந்திய அரசு கையெழுத்திட அழுத்தம் கொடுக்கச் செய்வது போன்றவை தான் ஈழச்சொந்தங்கள் இங்கே மற்ற எல்லோரையும் போல் நலமுடனும் வளமுடனும் வாழ வழிவகைக்கும். நாம் தமிழர் கட்சி அதிகாரத்தை அடைந்தது இவைகளைத் தன் உயரிய கொள்கையாக ஏற்றுச் செய்து முடிக்கும். அதுவே நமது உறவு ரவீந்திரனுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகக் கருதுகிறேன்.
செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.
ஏன் என்று கேட்க யாருமே இல்லாது நாதியற்ற இனமாக போய்விட்டோமா?
உயர் மின்அழுத்த கம்பிகள் கொண்ட இரும்பு கோபுரத்தில் ஏறி நின்று பலநூறு உறவுகள் பார்த்து நிற்கமின் கம்பியை தொட்டு எரிந்தபடியே ஈழத்து மனிதன் கீழே வந்து வீழ்ந்த அந்த காணொளியை பார்த்து பல நிமிடங்களாக என்னதென்று சொல்லி புரியவைக்க முடியாத முழு வெறுமை
முழுவதுமாக இருள் கவ்விய ஒரு பெருந்துயர், விரக்தி, ஏன் என்று கேட்க யாருமே இல்லாத ஒரு இனமாக போய்விட்டோமா என்ற வெதும்பல் எல்லாமே சூழ்ந்து நிற்கிறது..மனமெங்கும்…
கேள்விப்பட்ட அனைவரது உள்ளத்திலும் இதே உணர்வுகளே தோன்றி இருக்கும் நிச்சயமாக…ஒருவிதமான கையறு நிலை…அதிலும் முகம்மண்ணை பார்க்க கிடந்த அந்த உடலை மூடிய போர்வைக்கு பக்கத்தில் தலை மாட்டில் ஒரு மெழுகுதிரி மட்டும் எரிந்தபடி கிடக்க,
அந்த உடலை சுற்றி இருந்த என் தேசத்து உறவுகளின் கண்களில் தெரிந்த ஆற்றாமை, யாருமற்ற மனிதர்கள் என்ற வெறுமை,நிராகரிப்புகளையே நாள் தோறும் பார்த்து கேட்டு வாழும் ஒரு ஏதிலி வாழ்வின் அவலம் சூழ்ந்த வலிகள் எல்லாமே ஏதேதோ செய்கிறது மனதை…
இது ஒரு வெளிப்படையான சம்பவம்..ஆனால்’ இதனை போல தினமும் ஈழத்து மக்கள் தமிழகமுகாம்களில் சந்திக்கும் அதிகார அடக்குமுறைகள், வக்கிர துன்புறுத்தல்கள், நவீன அடிமைகள் போன்றதொரு வாழ்வுமுறை எல்லாமே பல கேள்விகளை முன்வைக்கிறது…
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த முகாம்களின் நிலைமை என்னவோ அவை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்ததுபோலவே இன்னும் இருக்கின்றது..
இந்தியாவின் வேறு மாநிலங்களில் தீபேத்திய அகதிகளுக்கோ,வங்கமொழி அகதிகளுக்கோ,இன்ன பிற அகதிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளில் பத்தில் ஒரு பங்குகூட தமிழகத்தின் அகதிமுகாம்களில் இல்லாது இருந்தே வந்துகொண்டிருக்கிறது.
வசதிகள் ஒரு புறம் இருக்க…அங்கு வாழும் ஈழத்து மக்களை மிருகங்கள் போன்றே மேய்த்து நிர்வாகம் செய்ய துடிக்கும் தமிழகத்து அதிகார வர்க்கம் மிக மோசமான துன்புறுத்தல்களை குறிப்பாக பெண்கள்மீது நடாத்தி வருகின்றது..
தட்டிக் கேட்க எழும் குரல்களை குண்டர்சட்டம்,தடா,பொடா என்று ஏதாவது ஒன்றில் அல்லது கஞ்சா கேஸில்கூட உள்ளே தள்ளி அமுக்கிவருகின்றது..இந்த அகதிமுகாமுக்கு தமிழகத்து அரசின் சார்பில் வருகை தரும் கடைநிலை ஊழியரிலிருந்து அதி உயர் பொறுப்பில் உள்ளவர்கள் வரைக்கும் அதிகமானோர் இந்த
மக்களை நடாத்தும் முறை அதிர்ச்சி அளிக்ககூடியது…
சிம்மாசனம் ஒன்று இல்லாத குறைக்கு அவர்கள் கதிரையில் அமர்ந்திருந்து விசாரிக்கும் முறை இருபத்திஓராம் நூற்றாண்டு வெட்கக்கேடு…
ஒரு சிறு குறிப்பு ஒன்றை எழுதி அதில் கிறுக்கி ஒரு கையெழுத்து இட்டுவிட்டால் யாரையும் முகாமைவிட்டு விரட்டவும், கொடுப்பனவுகளை நிறுத்தவுமான அதிகாரம் நிரம்பி வழிபவர்களாக இந்த தமிழகத்து அதிகாரிகள் இருக்கிறார்கள்.
இதனால் அவர்களின் இழி பேச்சுகளை மிக இழிந்த செயல்களை எல்லாம் பொறுத்துபோயே ஆகவேண்டிய ஒரு இடர்பாட்டினுள் எம் மக்கள் வசித்து வருகிறார்கள்.
எல்லா துன்பங்களும் தங்களுடனேயே போகட்டும் தம் அடுத்த தலைமுறைதன்னும் படித்து வெளியில் வேலைக்கு போய் இந்த முகாம் வாழ்வில்
இருந்து விடுவிக்கப்படட்டும் என்றே அனைத்து பெற்றோரும் பொறுத்து இருந்தார்கள்.
சொந்த தேசத்து மண்ணின் மணமோ ஏன் அதன் நிறமோ என்னவென்றே அறியாத ஒரு இளம் ஈழத்து இளையோர் உருவாகி வந்துகொண்டிருக்கிறார்கள்..
இந்த நிலையில் அவர்களுக்கு குடியுரிமையோ அன்றி வேறு வதிவிட உரிமைகளோகூட இன்னமும் வழங்க மறுத்தபடியே தமிழகத்து நிர்வாகம் நிற்கிறது..
வதிவிட உரிமை, குடியுரிமை என்பன இன்னும் வழங்கப்படாததால் இந்த இளம் தலைமுறையினர் என்னதான் நன்றாக படித்திருந்தாலும் வேலைவாய்ப்புகளில் நிராகரிக்கப்படுகின்றனர்.
அதிகூடிய திறன் உள்ளவர்களை வேலைக்கு எடுத்தாலும்கூட அவர்களைகூட எந்தநேரமும் வதிவிடஉரிமை, குடியுரிமை இல்லாததை சாட்டாக வைத்து நிர்வாகம் வேலையில் இருந்து விரட்டக்கூடிய சாத்தியங்களே அதிகமிருக்கின்றது. அதனால் வேலை செய்பவர்கள்கூட ஒருவிதமான நவீன அலுவலக அடிமைகள் போன்றே நடாத்தப்படுகிறார்கள்.
மதுரை திருப்பரங்குன்று உச்சப்பட்டி முகாமில் நடந்தது தமிழகம் முழுதும் ஈழத்தமிழர்களை தமிழக அதிகாரிகள் வர்க்கம் நடாத்தும் முறைமைக்கு ஒரு எரியும் சான்று.
உச்சப்பட்டியில் அகதிமுகாமில் ரவீந்திரனை சாகும்படி ஏவிய அந்த அதிகாரி துரைபாண்டி என்பவர் தமிழகம் முழுதும் உள்ள அதிகாரவர்க்கத்தின் ஒரு முகம் மட்டுமே..
அநேகமான அதிகாரிகள் இவரைப் போலவே அல்லது இவரைவிட மோசமானவர்களாகவே இருக்கிறார்கள் என்பது மிக உண்மை..
ஆட்சியில் உள்ளவர்களின் அசமந்த போக்கும், அவர்கள் ஈழத்தமிழ் அகதிகளை கணித்துகொள்ளும் பார்வையும் அதிகாரிகளிடம் வந்து சேர்கிறது. அதுவே அதிகாரிகளை ஒருவிதமான பேரரசர்கள் போல நடக்கும் திமிரை கொடுக்கிறது…
நாம் விழித்து கொள்ள இதற்கு முன்னும் பலபல நிகழ்வுகள் முகாம்களில் நடந்து வெளிச்சத்துக்கு வந்தும் உறங்கியே கிடக்கின்றோம் நாம்.
தங்கத்தட்டில் உணவூட்டப்படும் மேற்கத்திய அகதி வாழ்வினில் நாம் இருப்பதால் தமிழகத்து தென்கோடியில் எரிந்த எம் உறவு ஒன்றை பற்றி ஏதோ ஒரு வேற்று மனிதனை பற்றிய சேதியாக பார்த்து வாசித்து அடுத்த வேலைக்கு நகர்கின்றோம்.
தமிழகத்து தேர்தல் வருகின்ற மேமாதம் நடக்க இருக்கின்றது. நாம் அனைவரும் தனித்தனியாகவோ கூட்டாகவோ, குழுக்களாகவோ தமிழகத்து கட்சிகளுக்கு எழுதுவோம்.
அடுத்த ஆட்சி கட்டிலில் ஏறி சென்னை செயின் ஜோர்ஜ் கோட்டையில் கொடி ஏற்ற துடிக்கும் அனைத்து கட்சிகளையும் கோருவோம். அங்கு அகதிகாம்களில் வாழும் ஈழத்தமிழர்களை சக தமிழர்களாக பாரமரிக்கவும்,
அவர்கள் விரும்பினால் குடியுரிமை வழங்கவும்,அங்கு வாழும் இளைய ஈழத்தமிழர்களை கல்வி,வேலைவாய்ப்பு என்பனவற்றில் சமமாக நடாத்தவும் ( பிரத்தியேக இடஒதுக்கீடு இன்னும் சிறப்பு),
ஈழத்தமிழ் அகதிகள் மீது அதிகார துஸ்பிரயோகம் செய்யும் அதிகாரிகளை உடனேயே தண்டிப்பதற்கு உரிய ஒரு விசாரணை முறையை அமுல் நடாத்தும் படியும் கோருவோம்..
தமிழ், தமிழன் என்று மேடைக்கு மேடைக்கு முழங்கும் தமிழகத்து கட்சிகள் தமது தேர்தல்விஞ்ஞாபனத்தில் அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் முறைகள் பற்றிய விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் கோருவோம்…
எல்லாவிதமான சித்திரவதைகளிலும் மோசமானது அவமானப்படுத்தல் தான்.அத்தகைய ஒரு அவமானப்படுத்திலின் உச்சமே ஒரு உயிரை பலரும் பார்த்து இருக்க கருக வைத்திருக்கிறது…
தமிழுக்கு அரியணை அமைக்க,தமிழர்களின் தேசிய அடையாளம் காக்க எழுந்த ஒரு போராட்டத்தின் விளைவாக தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள் உலகில் தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழ்நாட்டில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடாத்தப்பட்டுவரும் முறைகள் தமிழன் என்று பொதுவாக சொல்லிக் கொள்ளவே கூசவைக்கின்றதாக இருக்கின்றது.
இதற்கு வெறுமனே ஆட்சியாளர்கள் மீதும்,அதிகார வர்க்கத்தின் மேலும் குற்றத்தை போட்டுவிட முடியாது.
இத்தகைய நீசச்செயல்களை தொடர்ந்து மௌனமாக பார்த்து கொண்டிருக்கும் எல்லோருமே இந்த மனிதனின் எரிந்து கருகி முகம்குப்புற கிடக்கும் உடலுக்கு பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.
காலம் இன்னும் கடந்துவில்லை…இப்போதே உங்கள் உங்கள் முகப்புத்தகம் மற்றும் சமூகவலை தளங்களில் ஒலு கணமேனும் இந்த உச்சப்பட்டி அகதிமுகாமின் அவலத்தை பதிந்து அதற்கு நீதி கேட்டு அனைத்து தேர்தல் கட்சிகளிடம் கோரிக்கை வையுங்கள்.
யாருமே அற்றதாக இந்த இனம் இருக்கிறதோ என்ற அவலத்தை நீக்குவோம்…
ச.ச.முத்து
[email protected]
இந்த அதிகாரிகள் சிலருக்கு ஒரு தட்டு தட்ட திராணி கிடையாது ..அறிக்கை விடுகின்றார் …
ஐயா சீமானே– தயவு செய்து ஆட்சிக்கு வந்து புல்லுரிவிகளை கலை எடுங்கள். அது என்ன தமிழ் நாடா?
நம்மால் இஸ்ரேல் போல் ஆக முடியுமா? கருப்பு யூதர்களை எதியோப்பியாவில் இருந்து அழைத்து வர விமானங்களை அனுப்பி அவர்களை மிகவும் அன்புடன் நாட்டுக்கு கொணர்ந்தது. இங்கு இந்த ஈன தமிழ் நாட்டு தமிழன்கள் இனப்பற்று இல்லா வெத்து வெட்டுகள்.
செத்தவனுக்கு தான் தெரியும் எதுக்காக தற்கொலை என்று.
பிணத்துக்கு அரசியல் சாயம் பூசும் சீமானே உன் பேச்சால் மக்களை வளைக்கும் கனவு ஒருபோதும் பலிக்காது.