தமிழக மீனவர்கள் 28 பேர் சிறைபிடிப்பு:இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சர்வதேச கடல் எல்லைப் பகுதியைத் தாண்டி மீன்பிடித்ததால் அவர்களை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இவர்களை அனைவரும் புதுக்கோட்டை, பாம்பன் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

தமிழக மீனவர்ககளை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்வதும் அவர்களை கைது செய்வதும் தொடர்கதையாக நீடித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் எட்டப்படாமல் பிரச்னை நீடித்து வருகிறது. மீனவர்களின் பிரச்னையை மனிதாபிமானத்தோடு கையாள வேண்டும் என்று இலங்கையை இந்தியா கேட்டுக்கொண்டுள்ள போதிலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் ராமேசுவரம், பாம்பன் பகுதியிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற 28 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக கூறப்படுவதாவது: ராமேசுவரம் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலையில் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்த் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற படகு உரிமையாளர் ஜெயந்த், ஸ்ரீதர், பிரகாசம், செய்யதுஅப்தாஹீர், அக்பர்அலி ஆகிய 5 மீனவர்களையும், பாம்பன் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை காலையில் நாட்டுப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த அமலதாஸ், பாம்பன் பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி, இருதயராஜ் ஆகியோரின் படகுகளில் சென்ற சிரோஜ், தேவதாஸ், விக்னேஷ், ஜஸ்டின், ராயப்பு, சியோன், சின்சன், சகாயம், பாபு உள்பட 23 மீனவர்களையும் இந்திய-இலங்கை கடல் எல்லையில் வெவ்வேறு பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

பின்னர் 23 மீனவர்களை மன்னார் காவல் நிலையத்திலும், 5 மீனவர்களை ஊர்க்காவல்துறை காவல் நிலையத்திலும் இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.

இதையடுத்து எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்குப் பதிவு செய்து அந்நந்த நீதிமன்றங்களில் போலீஸார் ஆஜர்படுத்தினர். 23 மீனவர்களை இம்மாதம் 21ஆம் தேதி வரையும், 5 மீனவர்களை இம்மாதம் 24ஆம் தேதி வரையும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

இதையடுத்து 23 மீனவர்களை வவுனியா சிறையிலும், 5 மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையிலும் போலீஸார் அடைத்தனர்.

மார்ச் மாத தொடக்கத்திலிருந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது இது 4-ஆவது முறையாகும். முன்னதாக மார்ச் 3-ஆம் தேதி 8 மீனவர்களும், 6-ஆம் தேதி 29 மீனவர்களும், மார்ச் 10-ஆம் தேதி 4 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 28 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும் அவர்களின் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் விடுவிக்கக் கோரி நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதன் பின்னரும் மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மேலும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

தேர்தலைப் புறக்கணிப்போம்

இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 51 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வரும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்குள் இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மே மாதம் 16-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக மீனவர் சங்கங்களின் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், “”2015-ம் ஆண்டில் மட்டும் சுமார் 70 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர 90 மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், விலையுயர்ந்த படகுகளையும், விடுவிக்க மத்திய அரசு ஏப்ரல்

15-ஆம் தேதிக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து மீனவர்களும் தேர்தலைப் புறக்கணிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இன்று முதல் பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் பகுதி மீனவர்கள் 23 பேரை விடுவிக்கக் கோரி பாம்பன் பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக மீனவர் சங்கத் தலைவர் ராயப்பன் தெரிவித்துள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: