கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகளை ஆய்வு நடத்தி பல்வேறு குழுவினரிடம் விசாரணை நடத்திய சகாயம் குழு, கடந்த ஆண்டு 700 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும், 8 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. இதில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளும் அடங்கியுள்ளன.
கிரானைட் முறைகேடு தொடர்பாக டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வியாழக்கிழமை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், சகாயம் குழு பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, கிரானைட் முறைகேடு குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்கலாமா என்பது குறித்து ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில் அளிக்க சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-http://www.nakkheeran.in