பயங்கரவாதத்தை தடுப்பதில் ஐ.நா. தோல்வி: மோடி விமர்சனம்

பயங்கரவாதத்தை தடுப்பதில் ஐ.நா.சபை தோல்வியடைந்து வருகிறது என்று விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை ஒடுக்க துரித நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஐ.நா. தனது முக்கியத்துவத்தை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

இதுதொடர்பாக, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில், அந்த நாட்டில் வாழும் இந்திய சமூகத்தினர் மத்தியில், பிரதமர் மோடி புதன்கிழமை மேலும் பேசியதாவது:

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, பயங்கரவாதத்தால் இந்தியா பாதிப்படைந்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு அப்பாவி பொதுமக்கள் இரையாகி வருவதாக இந்தியா கூக்குரல் இட்டபோதெல்லாம், அது உங்கள் நாட்டின் சட்டம்-ஒழுங்கு பிரச்னை என்று வல்லரசு நாடுகள் மிக எளிதாக கூறி வந்தன. ஆனால், கடந்த ஆண்டு மட்டும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 90 நாடுகள் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகின. அதன் விளைவாக ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பலியாகினர். இப்போதுதான் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கூக்குரல் உலக நாடுகளின் செவிகளில் விழ ஆரம்பித்துள்ளது.

ஒட்டுமொத்த மனித குலத்துக்கே பயங்கரவாதம் இன்று மிகப்பெரிய சவாலாக விளங்கும் நிலையில், இதனை ஒடுக்குவதில் ஐ.நா. தனது கடமையை முழுமையாக நிறைவேற்றாதது துரதிருஷ்டவசமானது. பயங்கரவாதத்தை தடுப்பதில் ஐ.நா. தோல்வியடைந்து வருகிறது. இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்காவிட்டால், ஐ.நா. சபை தனது முக்கியத்துவத்தை இழக்க நேரிடும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான முதல் நடவடிக்கையாக, பயங்கரவாதம் என்றால் என்ன? யார் பயங்கரவாதி? எது பயங்கரவாத நாடு? யார் பயங்கரவாதத்துக்கு உதவுபவர்கள்? பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் யார்? என்பது போன்ற பயங்கரவாதம் குறித்த வரையறைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால கோரிக்கையை ஐ.நா. நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களுக்கு தங்களின் செயல் குறித்த அச்ச உணர்வு ஏற்பட்டு, பயங்கரவாதத்திலிருந்து விலகி நிற்க முயலுவார்கள்.

அடுத்தகட்டமாக, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பயங்கரவாதத்தை வேரறுக்க உறுதியான நடவடிக்கைகளை ஐ.நா. எடுக்க வேண்டும். இதில் இனியும் காலதாமதம் செய்தால், இன்னும் அதிக இழப்புகளை நாம் சந்திக்க நேரிடும்.

பயங்கரவாதத்தில் நல்லது, கெட்டது என்று எதுவும் இல்லை. இதுபோன்ற சித்தாந்தங்களால் ஈர்க்கப்படுவதிலிருந்து இளைஞர்களை நாம் தடுக்க வேண்டும். இதேபோன்று எந்த மதமும் பயங்கரவாதத்தை போதிப்பதில்லை. எனவே, பயங்கரவாதத்தை மதத்துடன் தொடர்புபடுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். என்று மோடி பேசினார்.

அமெரிக்காவுடன் ஒப்பந்தம்: தனது பெல்ஜியம் பயணத்தை முடித்து கொண்டு, அணுசக்தி பாதுகாப்பு குறித்த உச்சி நாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வியாழக்கிழமை சென்றடைந்தார். அதைத்தொடர்ந்து, ஈர்ப்பலைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வசதியாக, இந்தியாவில் ஈர்ப்பலைகள் கூராய்வு மையத்தை (லிகோ) நிறுவுவது தொடர்பாக, அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் மோடி மற்றும் “லிகோ’ விஞ்ஞானிகள் முன்னிலையில், வாஷிங்டனில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய அணுசக்தித் துறையின் செயலர் சேகர் பாசு, அமெரிக்க தேசிய அறிவியல் அமைப்பைச் சேர்ந்த பிரான்ஸ் கோர்டுவா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வரும் 2023ஆம் ஆண்டில், இந்த ஆய்வு மையம் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-http://www.dinamani.com

TAGS: