இந்திய உளவாளி கைது செய்யப்பட்டதாக உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் தகவல்

rawஇந்திய உளவாளி ஒருவரை அண்மையில் கைது செய்ததாக பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், தற்போது அதுகுறித்து அமெரிக்கா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வியாழக்கிழமை கூறியுள்ளது.

 குல்பூஷண் யாதவ் என்ற இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியை பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவம் கடந்த வாரம் கைது செய்தது. இந்திய உளவு அமைப்பான “ரா’ அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும், தங்கள் நாட்டில் அவர் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டியதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நபீஸ் ஜக்காரியா, இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த வாரம் நடைபெற்ற முக்கியமான நிகழ்வை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டியதாக “ரா’ அமைப்பின் அதிகாரியே தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்திருப்பதை ஒட்டுமொத்த உலகமும் கவனித்தது.

இந்திய அரசு அமைப்புகள் பயங்கரவாதத்தை தூண்டிவிடுவது குறித்து உலக நாடுகளின் கருத்துகளை நாங்கள் வரவேற்கிறோம். மேலும், குல்பூஷண் யாதவ் கைதானது குறித்து அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷியா ஆகிய வல்லரசு நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் விரிவான தகவலைத் தெரிவித்துள்ளோம். ஈரானில் தங்கியிருந்தபோது அவரது செயல்பாடுகள் என்ன? என்பது குறித்து அந்நாட்டு அரசிடம் விவரங்களை கேட்டுள்ளோம்.

இதற்கிடையே, குல்பூஷணுக்கு தூதரக உதவி அளிக்க அனுமதி வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. அதுகுறித்து பரிசீலனை செய்து வருகிறோம் என்றார் ஜக்காரியா.

-http://www.dinamani.com

TAGS: