தமிழக மீனவர்களை துன்புறுத்தும் இலங்கைக்கு படகுகள் பரிசா? – மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

ramadasசென்னை: தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கொத்துக், கொத்தாக கைது செய்யும் இலங்கைக்கு படகுகளை பரிசளிப்பதா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கை:

இலங்கை மீனவர்களுக்கு 150 படகுகளையும், 300 பேருக்கு மீன்பிடி கருவிகளையும் வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டு மீனவர்களை ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் இலங்கையை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா தானாக முன்வந்து படகுகள் உள்ளிட்ட உதவிகளை வாரி வழங்குவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கடந்த இரண்டரை மாதங்களில் 99 மீனவர்களை கைது செய்ததுடன், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 82 படகுகளையும் இலங்கை பறிமுதல் செய்து வைத்திருக்கிறது. இந்திய மீனவர்களுக்கு இவ்வளவு துரோகம் செய்த இலங்கைக்கு மத்திய அரசு உதவி செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஒருவேளை இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய இந்திய அரசு முடிவு செய்தால், அதற்கு முன்பாக இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யவும், படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கை எடுத்துவிட்டு அதன்பின்னர் இலங்கைக்கு இந்த உதவிகளை இந்தியா செய்திருந்தால் அதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், 99 மீனவர்களை விடுதலை செய்வதாக கூறிய இலங்கை அரசு, அந்த முடிவை மாற்றிக் கொண்டு அனைத்து மீனவர்களின் சிறைக்காவலையும் நீட்டித்தது. இப்படிப்பட்ட இலங்கைக்கு உதவி வழங்குவது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இழைக்கப்படும் அவமானம் அல்லவா? இந்திய அரசால் வழங்கப்படும் உதவிகள் முல்லைத்தீவில் உள்ள தமிழர்களுக்குத் தான் வழங்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இது குறித்து ஒப்பந்தத்திலும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த காலங்களில் தமிழர்களை காட்டி இந்தியாவிடம் பெற்ற உதவிகளை சிங்களர்களுக்கு இலங்கை அரசு வழங்கிய நிகழ்வுகள் ஏராளமாக நடந்திருக்கின்றன. அந்த தவறை மீண்டும் இந்தியா செய்யக் கூடாது. இலங்கையிலுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வதுடன் படகுகளையும் விடுவித்தால் தான் இலங்கைக்கு உதவி செய்வது குறித்து சிந்திக்க வேண்டும். அதுவரை இலங்கைக்கு எந்தவித உதவிகளையும் இந்தியா செய்யக்கூடாது; படகு தருவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

tamil.oneindia.com

TAGS: