சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ”மக்கள் பாதை” என்ற பெயரில் இயக்கம் தொடங்கப்பட்டது. சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்த நிகழ்ச்சியில் இந்த இயக்கத்தை உ.சகாயம் ஐ.ஏ.எஸ் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்.
நவம்பர் மாதத்தில் மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு நாள் நண்பர்கள் என்னிடத்திலே ஒரு செய்தியை சொன்னார்கள். நான் முதலமைச்சராக வேண்டும் என திருச்சியைச் சேர்ந்த இளைஞர்கள் பேட்டி கொடுப்பதாக வலைதளத்திலே பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. அச்சமாகவும் இருந்தது.
ஏனென்றால் நான் அரசு பணியில் இருப்பவன். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க இயற்கை வளங்களை சுரண்டிய, ஒரு மாபெரும் முறைகேடுகளை விசாரணை நடத்தி அறிக்கையை நான் அனுப்ப உள்ள நேரத்தில் இதுபோன்ற செய்தி வருகிறதே, அது எனக்கு மட்டுமல்ல, நான் எடுத்துக்கொண்டிருக்கக் கூடிய முயற்சிகளுக்கும் அது இடராக வந்துவிடுமே என்று நான் அச்சப்பட்டேன்.
இருந்தாலும் இந்த இளைஞர்கள் இரண்டு நாள் பேசுவார்கள். பிறகு மறந்துவிடுவார்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். அதனால் எனக்கு ஏற்பட்ட அச்சம் மறைந்துபோனது. ஆனால் திடீரென்று நமது கிராமத்தில் பெண்களுக்கு சாமி வந்து ஆடுவதைப்போல, எங்கிருந்து புறப்பட்டார்களோ தெரியவில்லை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்னையில் வந்து, நான் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையோடு என்னை சந்திக்க வேண்டும், எனது வீட்டிற்கு வர வேண்டும் என்று ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அப்போது மீண்டும் அச்சம் வந்தது. இவர்கள் விட்டுவிடுவார்கள் என்று பார்த்தால் தொடருகிறார்களே. நமக்கு எத்தனையோ எதிரிகள் இருக்கிறார்கள். யாராவது ஏவி விட்டிருப்பார்களோ, நம்மை காலி செய்வதற்காக இப்படி செய்துகொண்டிருக்கிறார்களோ என்று நான் எண்ணிப் பார்த்தேன். எனக்கு எதிரிகள் என்று யாரையும் சொல்ல முடியவில்லை. அவ்வளவு எதிரிகள் இருக்கிறார்கள். ஏனென்றால் உன்னுடைய வாழ்க்கையும், வரலாற்றையும் நிர்ணயிப்பவன் நீ அல்ல. உன்னுடைய எதிரி என்பதுதான் உண்மை.
எனவே எந்த நேரத்தில் நான் எந்தப் பணியில் யார் மீது நடவடிக்கை எடுத்தேன் என்றால் நிறைய நடவடிக்கை எடுத்திருக்கிறேன். அக்கிறமங்கள், அநியாயங்கள் எங்கெல்லாம் தென்படுகிறதோ அங்கு அச்சமில்லாமல் நடவடிக்கை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே யார் அந்த எதிரிகள் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எதிரிகள் இப்படி ஏவி விட்டு காலி செய்யும் நோக்கத்தோடு செய்திருப்பார்களோ என்று எண்ணிப்பார்த்தேன். மறந்துவிடுவார்கள் என்று நினைத்தேன். மீண்டும் மதுரையில் பெரிய மாநாடு நடத்தினார்கள். அப்போது மீண்டும் அச்சம் வந்தது. அங்கேயும் முதல்வர் கோரிக்கையை வைத்தார்கள். அதிலிருந்து அடிக்கடி வலைதளங்களில் இந்த செய்தி பரவியது.
இது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது தெரியுமா? நான் மதுரை செல்வற்காக சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறேன். விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக, அந்த விமானத்தில் பயணிக்கக் கூடிய இளைஞர்கள் என்னை நெருங்கி வந்து புகைப்படம் எடுக்க ஆசைப்படுகிறார்கள். நான் புகைப்படம் எடுக்க அனுமதித்தேன்.
சில நேரங்களில் புகைப்படங்கள் எடுப்பது அச்சத்தை உருவாக்கும். காரணம் என்னவென்றால், நான் விசாரணை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில் ஈரோட்டில் ஒரு மனிதன், நான் அவர் பக்கத்தில் இருப்பதைப்போன்று ஒரு புகைப்படத்தை உருவாக்கி 60 லட்ச ரூபாய்யை சுருட்டிக்கொண்டு போன செய்தியை பார்த்ததற்கு பிறகு புகைப்படம் எடுப்பது எனக்கு கொஞ்சம் அச்சமாக இருக்கும். இருந்தாலும் என்னுடைய இளைஞர்கள் அப்படிப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் 6 இளைஞர்கள் எனது கைகளை பிடித்துக்கொண்டு, அய்யா வாருங்கள், அய்யா வாருங்கள் என்று சொன்னார்கள். எங்க கூப்பிடுறீங்க என்றேன். நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். முதலமைச்சராக வரவேண்டும் என்றார்கள். ஏதோ சென்னையில் இருந்து மதுரைக்கு கூப்பிடுகிற மாதிரி அய்யா வாருங்கள் என்று கூப்பிட்டார்கள்.
அதுமட்டுமல்ல…. கஜகஸ்தானில் மாதம் ரூபாய் 12 லட்சம் சம்பாதிக்கும் ஒரு பொறியாளர் சொல்லுகிறார் நீங்கள் அரசியலுக்கு வந்தால், நான் என்னுடைய வேலையை விட்டுவிடுகிறேன். எனக்கு அச்சம் அதிகமானது. இங்கிலாந்தில் இருந்து ஒரு பெண்மணி, உமா என்று நினைக்கிறேன் சரியாக பெயர் தெரியவில்லை, அறந்தாங்கியைச் சேர்ந்த அவர் விஞ்ஞானியாக இருக்கிறார் அவர் சொல்லுகிறார், நானும் எனது கணவரும் இங்கு விஞ்ஞானியாக இருக்கிறோம். நீங்கள் அரசியலுக்கு வந்தால் எங்கள் வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்துவிடுவோம் என்றார். எனக்கு அச்சம் அதிகமானது. இப்படியே சென்றால் எங்கே போய் விடுமோ என்று பொறுபோடு உணர்ந்தேன். ஆர்வமும், ஆற்றலும் உள்ள இளைஞர்களை மிக சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்று யோசித்தேன்.
நாங்கள் அடுத்த தேர்தலை பற்றி யோசிக்கக் கூடியவர்கள் இல்லை. நாங்கள் அடுத்த தமிழ் தலைமுறையைப் பற்றி யோசிக்கிறோம். நம்முடைய இளைஞர்களிடம் ஆற்றலும், அறிவும் இருக்கிறது. தமிழகத்தில் வேலையின்மை ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது. இளைஞர்களின் சக்தியை வீணடித்துவிடக் கூடாது.
தமிழ் சமூகத்தின் அடுத்த தலைமுறை மேம்மையுடையதாக இருக்கட்டும். நாங்களெல்லாம் ஒரு பித்தலாட்ட சமூகத்தின் பிரதிநிதிகள். ஆனாலும் இந்த பித்தலாட்ட சமூகம் எங்களோடு போகட்டும். அடுத்த சமூகம் ஒரு நேர்மையான சமூகமாக உருவாக வேண்டும். எனவே, அரசியலுக்கு அப்பாற்பட்டு, தேர்தலுக்கு அப்பாற்பட்டு என்னுடைய இளைஞர்களை சமுக பணிக்கு வாருங்கள் என்று அழைத்தேன். அதனுடைய விளைவு இன்றைக்கு மக்கள் பாதையாக மலர்ந்திருக்கிறது. இவ்வாறு பேசினார்.
திராவிடக்கட்சிகளை ஒழித்தாலே இனி வருகின்ற தலைமுறை சரியாக அமையும். காலங்காலமாக தமிழ்ச் சமுதாயத்தை ஏமாற்றி, கொள்ளையடித்து கோடி கோடியாக வாயில் போட்டுக்கொண்ட பொல்லாத நரஜென்மங்கள் நசுக்கி எறியப்பட வேண்டும்.அது நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!
திராவிடம் எனும் சொல் தமிழகத்தில் இருந்து மறைய வேண்டும் .அப்போதுதான் தமிழனின் தனித்தன்மை விளங்கும்.தமிழ் வாழும் .தமிழினம் ஓங்கும் .சகாயத்தின் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்