இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும்: ஒபாமா

இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 2 நாள்கள் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டின் நிறைவையொட்டி, அதிபர் ஒபாமா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அமெரிக்காவும், ரஷியாவும் அணு ஆயுதங்களை அதிகம் வைத்திருக்கும் நாடுகளாக உள்ளன. இவ்விரு நாடுகளும், அணு ஆயுத குறைப்பை முன்னெடுக்க தயாராக வேண்டும். இல்லையெனில், உலகில் அணு ஆயுதக் குறைப்பு என்பது சவாலான விஷயமாகிவிடும்.

அதேபோல், இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களிடமுள்ள அணு ஆயுதங்களை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. தங்களது பாதுகாப்புக் கொள்கைகளை உருவாக்கும் போது, இரு நாடுகளும் சரியான பாதையில் பயணிக்க வேண்டும்.

வடகொரியா உள்ளிட்ட சில நாடுகளில் அணு ஆயுதங்கள் பெருகி வருவது தீவிர கவலைக்குரிய விஷயமாகும். இந்த விவகாரம் தொடர்பாக, ஜப்பான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசித்தேன் என்றார் ஒபாமா.

-http://www.dinamani.com

TAGS: