டெல்லி: கேரள மாநிலத்தில் உள்ள பரவூரில் இருக்கும் புட்டிங்கல் தேவி கோவிலில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 1 மணி முதல் பட்டாசுகள், வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டது.
காலை 3.30 மணி அளவில் பட்டாசு வெடிக்கையில் தீப்பொறி பறந்து சென்று அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு பொட்டலங்களில் பட பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் கோவில் வளாகத்தில் தீப்பிடித்து எரிந்ததில் 90 பேர் பலியாகியுள்ளனர், 200 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி தனது இன்றைய பணிகளை ரத்து செய்துவிட்டு கோவிலுக்கு விரைந்துள்ளார். காயம் அடைந்துள்ளவர்கள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, கொல்லம் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து என் இதயத்தை உலுக்கிவிட்டது. இந்த விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பலியானவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
முதல்வர் உம்மன் சாண்டியிடம் கோவில் தீ விபத்து குறித்து பேசினேன். படுகாயம் அடைந்தவர்களை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவை உடனே கொல்லம் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். நான் விரைவில் கேரளா சென்று நிலைமையை நேரில் பார்வையிட உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, கேரளா கோவில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பலியானவர்களின் குடும்பங்களுக்கு உதவியும், காயம் அடைந்தவர்களுக்கும் உரிய மருத்துவ உதவியும் அளிக்க மாநில அரசு மற்றும் பிற ஏஜென்சிகளை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
–tamil.oneindia.com

























