கேரளா கோவில் தீ விபத்து: உண்மையில் நடந்தது என்ன?

kollamகொல்லம்: கேரளாவில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் அனுமதி மறுப்பையும் மீறி நடத்தப்பட்ட வானவேடிக்கை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 107 பேர் பலியாகியுள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் வருடாந்திர திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட வானவேடிக்கை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 107 பேர் உடல் கருகி பலியாகினர், 350 பேர் காயம் அடைந்தனர். புட்டிங்கல் தேவி கோவிலில் நடந்தது என்ன என்ற விபரம் வருமாறு,

 

ஆண்டுதோறும் விஷு எனப்படும் மலையாளப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது புட்டிங்கல் தேவி கோவிலில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியை பார்க்க கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

 

புட்டிங்கல் கோவிலில் வானவேடிக்கை நிகழ்ச்சி மட்டும் அல்ல வானவேடிக்கை போட்டியும் நடத்தப்படும். போட்டியை பார்த்து நடுவர்கள் தீர்ப்பு அளிப்பார்கள். மக்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து வானவேடிக்கை போட்டியில் பங்கேற்பார்கள். எந்த குழுவின் வானவேடிக்கைகள் மிகவும் சப்தமாக, பிரமாண்டமாக, பார்க்க அழகாக உள்ளது என்பதன் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.

இந்த ஆண்டு புட்டிங்கல் கோவிலில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து போட்டி நடத்தப்படாமல் வானவேடிக்கை நிகழ்ச்சி மட்டும் நடத்தப்பட்டது. வானவேடிக்கை நிகழ்ச்சி இரவு 11.50 மணிக்கு துவங்கியுள்ளது.

 

காலை 3.30 மணி அளவில் அமிட்டு என்ற ஒரு வகை வானவேடிக்கை வெடிக்கப்பட்டது. அது வானில் சென்று வெடிக்காமல் கீழே விழுந்து தீப்பொறி பரவியது. தீப்பொறி அருகில் உள்ள கான்கிரீட் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த 12 அமிட்டுகள் மீது பட்டது. இதையடுத்து அந்த அமிட்டு வானவேடிக்கைகள் பயங்கர சப்தத்துடன் வெடித்தன.

வானவேடிக்கைகள் வெடித்த சப்தம் பல நூறு மீட்டர் வரை கேட்டுள்ளது. சப்தத்தை கேட்டு மக்கள் அச்சம் அடைந்து செய்வதறியாமல் இருந்துள்ளனர். அப்போது அமிட்டுகள் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிக்கி பலர் பலியாகினர்.

http://tamil.oneindia.com

TAGS: