கொல்லம் தீ விபத்தில் பலர் பலி: திருவிழாக்களில் வாணவேடிக்கைக்கு தடை விதிக்க திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு மறுப்பு

கொல்லம் தீ விபத்தில் பலர் பலி: திருவிழாக்களில் வாணவேடிக்கைக்கு தடை விதிக்க திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு மறுப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொல்லம் அருகே பரவூர் புட்டிங்கல் அம்மன் கோவிலில் வாணவேடிக்கையின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 350–க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் கோவில்களில் மிகப்பெரிய அளவில் வாணவேடிக்கை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால், கேரளாவில் 1255 கோவில்களை நிர்வகித்து வரும் மிகப்பெரிய வாரியமான திருவாங்கூர் தேவசம் போர்டு,  திருவிழாக் காலங்களில் வாணவேடிக்கையை முற்றிலுமாக தடை செய்ய முடியாது என்று கூறியுள்ளது.

அதேசமயம் அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் கோர்ட் உத்தரவுகளின் அடிப்படையில் பாதுகாப்பான முறையில் வெடிகளை வெடிக்க வேண்டும் என தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறுகிறார். மிகப்பெரிய வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை தடை செய்வதற்கு போர்டு உறுப்பினர் ஆஜய் தாராயில் ஆதரவு தெரிவித்தார்.

இதற்கிடையே வரும் 17-ம்தேதி தொடங்க உள்ள திரிச்சூர் பூரம் விழா சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் என்றும், ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் வாணவேடிக்கை ரத்து செய்யப்படமாட்டாது என்றும் விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பேராசிரியர் குட்டி குறிப்பிட்டார்.

-http://www.maalaimalar.com

TAGS: