கோஹினூர் வைரம் பிரித்தானிய மஹாராணிக்கு பரிசாக வழங்கப்பட்டது: மத்திய அரசு

kohinurஇந்தியா கோஹினூர் வைரத்தை திரும்ப பெற முயற்சிக்க கூடாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

All India Human Rights & Social Justice Front என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், பிரித்தானியாவில் உள்ள கோஹினூர் வைரம், திப்பு சுல்தானின் வாள், மோதிரம் உள்ளிட்ட பிரபல கலைப் பொருட்களை பிரித்தானியா இந்தியாவிடம் திருப்பி அளிக்க வேண்டும் என கோரியுள்ளது.

இது தொடர்பான விசாரணையில், மத்திய அரசு கூறுகையில், கோஹினூர் வைரம் பிரித்தானியாவால் திருடப்பட்டதோ, வலுக்கட்டாயமாக எடுத்து செல்லப்பட்ட பொருளோ அல்ல.

அந்த 105 கேரட் வைரம், 1850ம் ஆண்டு, பஞ்சாபை ஆட்சி செய்த மஹாராஜா ரஞ்ஜித் சிங் என்பவரால் மஹாராணி விக்டோரியா தலைமையிலான கிழக்கிந்திய நிறுவனத்துக்கு பரிசாக வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

எனவே அந்த வைரத்தை திரும்ப பெற இயலாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், இவ்வாறு நீங்கள் கூறினால், எதிர்காலத்தில் கோஹினூர் வைரத்தை முறைப்படி மீட்க நினைத்தாலும் மீட்கவே முடியாது என எச்சரித்துள்ளனர்.

எனினும், இவ்விவகாரத்தில் தொடர்புடைய வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக தன்னுடைய நிலையை தெரிவிக்கவில்லை.

எனவே, இன்னும் 6 வாரங்களில், இது தொடர்பாக மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு இந்தியா வருகை தந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன், கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பியளிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com

TAGS: