மும்பை: மகாராஷ்டிர மாநிலம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள அணைகளில் வெறும் 19 சதவீத தண்ணீர் மட்டுமே உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிர மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் அடிக்கடி வறட்சியை சந்திக்கின்றன என்றாலும், இந்த ஆண்டு வறட்சியின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள வறட்சி கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகவும் கடுமையானவற்றில் ஒன்றாக கூறப்படுகிறது.
வறட்சியின் காரணமாக பல மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகளை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தண்ணீரை மிச்சப்படுத்தும் வகையில் சில கிராமங்களில் மக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் கிராமங்களுக்கு 2,745 தண்ணீர் டேங்கர்கள் மூலம் அரசு தண்ணீர் வழங்கி வருகிறது. இது மட்டுமின்றி வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மரத்வாடாவில் உள்ள லத்தூருக்கு சிறப்பு டேங்கர் ரயில் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.
மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள மிராஜில் இருந்து தண்ணீர் நிரப்பப்பட்டு இந்த ரயில் லத்தூருக்கு செல்கிறது. இதேபோல், உள்ளூர் மதுபான ஆலைகளுக்கு 20 சதவித தண்ணீர் தடையை அறிவித்துள்ளார் அவுரங்காபாத் கலெக்டர். இந்தத் தடையானது பிற நிறுவனங்களுக்கு 10 சதவிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அணைகளில் தண்ணீர் அளவு 19 சதவீதம் மட்டுமே உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக மரத்வாடா அணையில் வெறும் 3 சதவீத நீர் தான் உள்ளதாம். கடந்தாண்டு இதே நாட்களில் மராட்டிய அணைகளில் 32 சதவிதம் தண்ணீர் இருப்பு இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள 11 முக்கிய அணைகளில் 8 அணைகளில் தண்ணீர் அளவு மிகவும் குறைந்து விட்டது தெரிய வந்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறுகையில், “கடந்த 5 வருடத்தில் மரத்வாடாவில் ஏற்படும் 4-வது வறட்சி இதுவாகும். 8,522 கிராமங்கள் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளது. நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவதை நாங்கள் ஏற்கனவே நிறுத்திவிட்டோம். தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்க மாவட்ட கலெக்டர்கள் மற்றும் டிவிஷனல் கமிஷ்னருக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.