திண்டுக்கல்: தமிழகத்தில் 50 ஆண்டு கால அதிமுக – திமுக அரசியல் வாழ்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சீமான் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். நத்தம் வேட்பாளர் சிவசங்கரனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் தாய்மொழி சிதைந்து வருகிறது. மற்ற நாட்டில் அவரவர் பெயர்களுக்கு முன்பு மொழிப்பற்று கிடையாது. நம்நாட்டில் தமிழ்செல்வன், தமிழ்குமரன், தமிழரசி, தமிழ்சுடர் இப்படி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். காலப்போக்கில் நம் தாய்மொழிப் பற்று குறைந்து வருகிறது. சத்தியத்தை சத்தமாக கூறுகிறோம். உண்மையை உரக்கப் பேசுகிறோம். எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழர்களின் சங்கே முழங்கு என்று கூறியுள்ளனர். அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
50 ஆண்டுகள் தி.மு.க.வு.ம், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்ததில் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. காமராஜர், கக்கன் காலத்தில் இருந்த அரசியல் மக்களுக்காக இருந்தது, மாடு இழுக்காத செக்கை வ.உ.சி.இழுத்து சுதந்திர உரிமையை நிலைநாட்டினார். 50 ஆண்டு கால அதிமுக – திமுக அரசியல் வாழ்வுக்கு முடிவு கட்டுங்கள். தொடக்கக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசத்தை தர வேண்டும்.
உயிர்காக்கும் மருத்துவ வசதி அனைத்தையும் இலவசமாக தரவேண்டும். இப்படி இருந்தால் எதற்காக லஞ்சம் கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. வாழ்வாதாரம், பொருளாதாரம் உயர நாம் இலவசத்தை மறந்து, தன்னம்பிக்கையை நிலைநாட்ட வேண்டும். ஊழல், லஞ்சம், மதுவை ஒழிப்பதற்கு இனிமேலாவது யோசித்துப்பார்த்து வாக்களியுங்கள்.
234 தொகுதிகளிலும் நாம் போட்டியிடுகிறோம் என்றால் இளைய தலைமுறையினரின் பார்வைகள் நாம் தமிழர் கட்சியின் பக்கம் விழ வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவல்துறையின் கட்டிடம் வெள்ளையாக மாற்றப்படும். அவர்களது பணி நேரமும் மாற்றி அமைக்கப்படும். வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்துவோம். முறையான ரேசன் கடை நிர்வாகத்தை கொண்டு வருவோம்.
தமிழகத்தில் குடும்ப அரசியல் மட்டுமே நடந்து வருகிறது. திமுகவில் கருணாநிதியை தொடர்ந்து ஸ்டாலினும், கனிமொழி.. அதேபோல் தேமுதிகவில் விஜயகாந்தை தொடர்ந்து பிரேமலதா அரசியல் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கட்சியில் இருப்பவர்கள் யாரும் கேட்க முடியாது என்றும் தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் மட்டும்தான் ஆட்சி செய்த இரண்டு முதலமைச்சர்கள் மது ஆலைகளை நடத்தி, மக்களை சாகடிக்கிறார்கள் என குற்றம் சாட்டினார். மேலும் வெள்ளைச் சர்க்கரையை தடை செய்வோம். இழந்த உரிமைகளை மீட்பதற்கு நம் மக்கள் அனைவரும் இரட்டை மெழுகுவர்த்தியில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு சீமான் பேசினார்.
திராவிட திருட்டு கூட்டங்களின் முடிவை பாடையுடன் சேர்த்து கட்டுங்கள்…