“கொள்ளுப் பேரன் காலம் வரை ஆட்சியில் நீடிக்க விரும்பும் கருணாநிதி’

  • கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். உடன், அக்கட்சி நிர்வாகிகள்.
  • கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். உடன், அக்கட்சி நிர்வாகிகள்.

திமுக தலைவர் கருணாநிதி 93-ஆவது அகவையிலும் தேர்தலில் போட்டியிடுவது நாட்டின் நலனுக்காக அல்ல; தனது கொள்ளுப் பேரன் காலம் வரை ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மே தின விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தொழிலாளர்களின் உரிமைகளைப் பறைசாற்றும் மே தினம் காலம் காலமாக உழைக்கும் வர்க்கத்தால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கொடிகள், தோரணங்கள் கட்டக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதிப்பதை ஏற்க முடியாது. எனவே, வரும் காலத்திலாவது தேர்தல் ஆணையம் இது போன்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை ரூ. 60 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சாதாரண மக்கள் மற்றும் சிறு வியாபாரிகளிடம் ஒரு லட்சத்துக்கும், இரண்டு லட்சத்துக்கும் ஆவணம் கேட்கும் தேர்தல் அதிகாரிகள் தற்போது ஐந்து கோடி, ஆறு கோடி என பறிமுதல் செய்வதாக கூறியுள்ளனர். ஆனால், அதன் பின்னணியில் இருக்கக் கூடிய அரசியல் கட்சி தொடர்பு குறித்து விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

எனவே, சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் பணத்துக்குப் பின்னால் எந்த சக்தி இருக்கிறது என்பதை வெளியிட வேண்டும். நேர்மையாக நடக்கிறோம் என்று தேர்தல் ஆணையம் சொன்னால் மட்டும் போதாது. அதன் செயல்பாடுகள் நம்பத்தகுந்த வகையில் இருக்க வேண்டும்.

பாதுகாப்புத் துறையில் நேரடி அன்னிய முதலீட்டை அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்த்து வருகின்றன. இதில், 2011-ஆம் ஆண்டில் இருந்து 2015-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நேரடி அன்னிய முதலீட்டில் மூன்றில் 2 பங்கு மோரீஷஸ் தீவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் இருந்து வந்துள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து முதலீடு வர வேண்டும்.

ஆனால், ஒரு கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட நாடு 100 கோடி கொண்ட நாட்டில் 2 பங்கு முதலீட்டை வைத்துள்ளது என்றால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மோரீஷஸ் தீவில் சிறிய பெயர் பலகையை வைத்து எளிதாகப் பதிவு செய்துவிட முடியும். பின்னர் கள்ளப் பணம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு வெள்ளைப் பணமாக மாற்றப்படுகிறது.

கடந்த 2003-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் அப்போதைய முதல்வர் மோடி, கிருஷ்ணா கோதாவரியில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அங்கு, 30 லட்சம் மெட்ரிக் டன் இருப்பதாகவும், அதை தன்னுடைய நிபுணர்கள் கண்டுபிடித்து விட்டதாகவும், அதை எடுத்தால் 2005-ஆம் ஆண்டு முதல் கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்ய வேண்டியதில்லை என்று சொன்னார். தற்போது, இந்திய கணக்குத் தணிக்கை அதிகாரி, அதுகுறித்து அறிக்கையை சமர்ப்பித்து உள்ளார்.

இதில், கார்ப்பரேஷன் அமைக்கப்பட்டு 16 வங்கிகளில் அந்தத் திட்டத்துக்காக ரூ. 19 ஆயிரத்து 700 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இவ்வளவு பணமும் ஆய்வுக்காக, கட்டடம் கட்ட, சுத்திகரிக்க என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சொட்டு எண்ணெயோ அல்லது எரிவாயுவோ எடுக்கப்படவில்லை. இது அநியாயமான முழு தோல்வி என கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனவே, இதற்கு காரணமான அத்தனை பேரையும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்தக் கட்சியினர்தான் தமிழகத்தில் ஊழலை ஒழிக்கப் போகிறோம் என்று கிளம்பி வந்துள்ளனர்.

பல மாநிலங்களில் பல ஆண்டுகளாக மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது இல்லை. மாநிலம் வாரியாக கல்வித் தரம் வேறுபடுகிறது. இந்நிலையில், மத்திய அரசு தான் விரும்பும் செயலை செய்வதற்காக பொது நுழைவுத் தேர்வு என்ற பெயரில் நலிந்தவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் ஒதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இளைஞர்களால்தான் தமிழகம் விடிய வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார். அதனால்தான் 6-ஆவது முறையாக முதல்வர் வேட்பாளராக அவர் போட்டியிடுகிறாரா?. இது நாட்டின் நலனுக்காக அல்ல; தனது கொள்ளுப் பேரன் காலம் வரை ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, குடும்ப ஆட்சி வரக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு வாக்கு அளிக்கக் கூடாது. தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற, வெளிப்படையான நேர்மையான ஆட்சி நடத்தப்படும் என்றார்.

இந்தச் சந்திப்பின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுந்தரம், ஜேம்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

-http://www.dinamani.com

TAGS: