வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எதிராக கிரிமினல் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது.
தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எதிராக அதிகளவில் கிரிமினல் குற்றங்கள் நடைபெறும் மாநிலங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதில், கடந்த 2014-ம் ஆண்டு மட்டும் வெளிநாட்டினருக்கு எதிராக கிரிமினல் குற்றங்கள் நடைபெற்றதாக டெல்லியில் 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக 73 கிரிமினல் வழக்குகளுடன் கோவா இரண்டாம் இடத்திலும், 66 வழக்குகளுடன் உத்தரபிரதேசம் மூன்றாம் இடத்திலும், மகாராஷ்டிரா 59 வழக்குகளுடன் நான்காம் இடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய உள்துறை விவகாரங்கள் துறை அமைச்சர் ஹரிபாய் பிரதிபாய் கூறுகையில், வெளிநாட்டினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இதில், நாடு முழுவதும் 486 கிரிமினல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் அடங்கும். வெளிநாட்டினருக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் செய்த குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
-http://news.lankasri.com