நாக்பூர்: பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்க உயர் ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், தொழிலாளி ஒருவர் தனி ஒருவராக கிணறு தோண்டி அதன் தண்ணீரை அனைத்து தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூர் அருகேயுள்ள, வாசிம் மாவட்டம் கோலம்பேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் பாபுராவ் தஜ்னே. கூலித்தொழிலாளியான இவரது மனைவி சமீபத்தில் அப்பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு நீர் பிடிக்க சென்றார். அந்த ஊரில் பிற வகுப்பினர் புழங்கும் கிணற்றில் தலித்துகளை தண்ணீர் பிடிக்க அனுமதிப்பதில்லை. ஆயினும், தான் வழக்கமாக தண்ணீர் எடுக்கும் கிணற்றில் நீர் வற்றிவிட்டதால், பாபுராவ் தஜ்னேவின் மனைவி பொது, கிணற்றில் நீர் பிடிக்க சென்றார்.
ஆனால், பிற உயர் ஜாதியினர், இவரை நீர் பிடிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டனர். வீடு திரும்பிய அவர், நடந்ததை கணவரிடம் கூறி வருத்தப்பட்டார்.
இருப்பினும் பாபுராவ் வருத்தப்படவில்லை. உயர் ஜாதியினருக்கு பதிலடி தர முடிவு செய்து, தனி ஒருவராக தன்னுடைய நிலத்தில் கிணறு தோண்டினார். முதலில், இந்த முயற்சி வேண்டாம் என்று மனைவி தடுத்தார்.
எனினும், விடாமல் முயற்சி செய்து, 40வது நாளில் கிணறை தோண்டி முடித்தார். பாபுராவ் தஜ்னேயின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. அவர் தோண்டியிருந்த அந்த கிணற்றில், நிறைய தண்ணீர் கிடைத்தது. இதைப்பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
தற்போது அந்த கிணற்று நீரை வைத்து அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அப்பகுதியை சேர்ந்த தலித் மக்களும், உயர் சாதியினரும் பயனடைந்து வருகின்றனர். இந்த தகவல் வாசிம் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தாசில்தார் கிராந்தி டோம்பி, கோலம்பேஷ்வர் கிராமத்துக்கு சென்று பாபுராவ் தஜ்னேயை சந்தித்தார். மேலும், அவரது இந்த செயலை பாராட்டினார்.
–tamil.oneindia.com
கைக் கூப்பி வணங்கக் கூடிய உண்மையான தொண்டன்