மாநிலம் முழுவதும் 29 ஆயிரம் கிராமங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படும் என்று ஐகோர்ட்டில் மாநில அரசு தெரிவித்தது.
தண்ணீர் பற்றாக்குறை
மராட்டியத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட கோரி பல்வேறு பொதுநல மனுக்கள் மும்பை ஐகோர்ட்டில் தொடரப்பட்டன. இதனை விசாரித்த ஐகோர்ட்டு, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மராட்டிய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டது. இதன்பேரில், இந்த வழக்கு சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மராட்டிய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், ‘‘மாநிலத்தில் 29 ஆயிரம் கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்படும். 2009–ம் ஆண்டைய வறட்சி மேலாண்மை திட்டத்தின்படி, நிவாரணம் வழங்கப்படும்’’ என்று கூறப்பட்டிருந்தது.
அனைத்து மாவட்டத்துக்கும் சாத்தியமல்ல
மேலும், வறட்சி பாதித்த பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை கடந்த வாரம் தீவிரமாக நடைமுறைப்படுத்தியதாகவும், தண்ணீர் பற்றாக்குறையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், அனைத்து மாவட்டங்களுக்கும் அரசால் தண்ணீர் வினியோகம் செய்வது சாத்தியமற்றது என்றும், இருந்தாலும், சீரான அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என்றும் அட்வகேட் ஜெனரல் ரோகித் தியோ வாதிட்டார். வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை வருகிற 24–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
-http://www.dailythanthi.com