ஆரோக்கிய குறைபாடால் அவதிப்படும் முதல்வர் வேட்பாளர்கள்.. தமிழக வாக்காளர்களின் பரிதாப நிலை

karunanithiசென்னை: தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிருத்தப்படும், 3 முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுமே வயது முதிர்வு மற்றும், ஆரோக்கிய குறைபாடால் அவதிப்படுவது இந்த தேர்தலின் ஒரு பெரும் சோகம். 93 வயதில் காலடி எடுத்து வைக்க உள்ள கருணாநிதியால் எந்திரிக்க முடியவில்லை, 69 வயதாகும் ஜெயலலிதாவில் நின்றபடி பேச முடியவில்லை. இவர்களுக்கு மாற்றாக வந்துள்ளேன் என்று கூறிய விஜயகாந்த்தால் பிறர் உதவியின்றி நடக்க முடியவில்லை. தள்ளுவண்டி, நகரும் நாற்காலி என்றெல்லாம் கருணாநிதியை கேலி செய்த அதிமுகவினர் இப்போது உடல் பிரச்சினை குறித்து பேசாமல் கடந்து செல்ல தொடங்கியுள்ளனர். பதிலுக்கு, உங்கள் தலைவி ஏன் நின்றபடி பேசுவதில்லை என்ற கேள்வி வந்துவிடும் என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டுள்ளது.

விஜயகாந்த், ஏன் திடீரென மலேசியா போகிறார், மும்பை செல்கிறார் என்பது பரம ரகசியமாக உள்ளது. ஆனால் மக்களின் துரதிருஷ்டம் என்னவென்றால், இம்மூன்று தலைவர்களை கொண்ட கட்சிகளுக்குத்தான் கருத்து கணிப்புகளில் முதல் 3 இடங்கள் கிடைத்தபடி உள்ளன.

இவர்கள் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், மக்களை பேணி பாதுகாப்பார்களா, அல்லது தங்களை பேணுவதற்கு நேரம் போதுமா என்பது வாக்காளர்களிடம் உள்ள கேள்வி.

உடல் நலக்குறைவு எல்லோருக்கும் ஏற்படக்கூடியது. ஆனால் உபாதை பற்றி அறிந்ததும், மக்களுக்காக, பிறரிடம் பதவியை விட்டுத்தர பரந்த மனதிருக்க வேண்டும்.

ஒருவேளை, ஆரோக்கியமான, அறிவுள்ள மக்கள் தமிழகத்தில் இல்லை, தலைமையேற்க வேறு யாருக்கும் இங்கு தகுதியும் இல்லை என்று இந்த தலைவர்கள் கருதிவிட்டார்கள் போலும்.

tamil.oneindia.com

TAGS: