மின்தடை ஏற்படுத்தப்பட்டு ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்!

bribeசென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுத்தப்பட்டு ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக புகார் எழுந்ததால், இது குறித்து அறிக்கை அளிக்கும்படி மின்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் வருகிற 16ம் தேதி சட்டமன்றத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக அமைச்சர்கள் உட்பட மாநிலம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் மின்சாரத்தை இரவில் நிறுத்தி விட்டு பணம் விநியோகிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பணம் கொடுப்பவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்து வருகின்றனர்.

நஜிம் ஆலோசனை: தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பணம் பட்டுவாடாவை தடுக்கவும், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி நேற்று முன்தினம் காலை டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். மாலையில், சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் உள்ள தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து 2வது நாளாக நேற்று, மீதமுள்ள 16 மாவட்ட தேர்தல் பார்வையாளர்களுடன் நசீம் ஜைதி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். நேற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த ஆலோசனை நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தேர்தல் டிஜிபி மகேந்திரன் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.

மின்சாரம் நிறுத்தம்: வீடியோ கான்பரன்சிங் கூட்டம் முடிந்த பிறகு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் மின்சாரத்தை தடை செய்துவிட்டு, அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, இன்று (நேற்று) நடந்த வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, பணம் கொடுப்பதற்காக மின்சாரம் தடை செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழக மின்சார வாரிய செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் விசாரணை நடத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கை அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

கடும் நடவடிக்கை: வாக்குப்பதிவு நாளான மே 16ம் தேதி வாக்களிக்க வசதியாக அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை பெங்களூர், மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வேலை செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக புகார் வந்துள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரை விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோன்றுதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் கம்பெனி ஊழியர்களுக்கும் கட்டாயம் விடுமுறை விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை விடாத கம்பெனிகள் பற்றி 1950 என்ற புகார் எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, வாகனங்களில் அல்லது வீடுகளில் பணம் பதுக்கி வைத்திருப்பது பற்றி புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புகார் தெரிவிப்பவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு எண்ணுக்கு தொலைபேசியில் பேசினால் இன்னும் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும். சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இரவு ஒரு டிஆர்ஓ ஒருவரை பணியில் நியமித்து, புகார்கள் மீது உடனுக்குடன் பறக்கும் படைகளுக்கு தெரிவிக்க நேற்று முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

-http://www.dinakaran.com

TAGS: