நாம் தமிழர் கட்சியுடன் பயணிக்கும் ஒரு இளைஞரின் அனுபவம்!

naam-tamilar-img

சென்னை: பாரம்பரியமாக திராவிடக் கட்சிகளுக்கு ஓட்டளித்து வந்த குடும்பம். பெரிதாக அரசியல் ஈடுபாடில்லாதவனாகத்தான் வளர்க்கப்பட்டேன். சென்னை மழை வெள்ளத்தின் போது முதல் முறையாக தெருவில் இறங்கினேன். அப்பொழுது எங்கள் பகுதியில் நாம் தமிழர் கட்சியினரின் ஈடுபாடு மிக்க பணிகளால் உந்தப்பட்டு அவர்களுடன் பயணிக்கத் துவங்கினேன். எந்த சார்புமின்றி அவர்களுடன் பயணிக்கும் ஒருவனாக நாம் தமிழர் கட்சியைப் பற்றிய எனது பார்வையை இங்கு முன்வைக்கிறேன்.

செலவு செய்யும் திறன், சாதி சார்பு என்று பிற கட்சிகளில் வேட்பாளர் தேர்வு நடந்த பொழுது, அர்ப்பணிப்பும், தகுதியும் கொண்ட எளிய வேட்பாளர்கள் நாம் தமிழர் கட்சியால் முன்னிறுத்தப்பட்டனர். இளைஞர், கல்வியாளர், என நிறைந்திருந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொள்ளத் தூண்டியது. இன்னும் சொல்லப் போனால் பல வேட்பாளர்கள் தங்கள் வருமானத்தை விடுத்து தம் மக்களுக்காக களம் காண வந்துள்ளனர்.

naam-tamilar-img1

எனக்குத் தெரிந்து மிகச் சிறந்த கல்வியாளரான கோவை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கல்யாணசுந்தரம் ஜெர்மனியில் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிறார். இதேபோல் அரவக்குறிச்சி வேட்பாளர் அரவிந்த் குருசாமி, துபாயில் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு தனது சொந்த ஊரில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார். இப்படி தகுதியான வேட்பாளர்களை 234 தொகுதிகளிலும் முன்னிறுத்தியது நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றி.

ஊழலின் துவக்கப் புள்ளி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் பணம் பெறுவது. எந்த சலனமுமில்லாமல் அனைத்து கட்சியினரும் இதைச் செய்து கொண்டு ஊழலை ஒழிப்போம் என்று கோசமிட்டுக் கொண்டிருக்க. சத்தமே இல்லாமல் பணத்துடன் வந்தவர்களை நிராகரித்து அர்ப்பணிப்பும், தகுதியும் உள்ளவர்களுக்கு வாய்ப்பளித்து, ஊழலை வேரறுக்கும் முதல் புள்ளியைத் துவக்கி வைத்தார் சீமான். உண்மையைச் சொன்னால் இதன் பிறகுதான் சீமான் உறுதியாக நம்ப வேண்டிய தலைவராக எனக்குப் புலப்பட்டார்.

நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு பேச்சாளரும் கடந்த 2 மாத காலமாக தினமும் பல மணிநேர அரசுப் பேருந்துப் பயணம், கிடைக்கும் இடத்தில் ஓய்வு, இடைவிடாத பேச்சு என தம்மை வருத்திக் கொண்டு களத்தில் சுழல்கிறார்கள். எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் எப்படியாவது இந்த மண்ணில், மக்களுக்கான அதிகாரத்தை நிறுவிடும் ஒரே வேட்கையில் பயணிக்கும் இவர்களைக் கண்டு ஒரு புறம் பெருமிதமும் மறுபுறம் வியப்பையும் சுமந்து வருகிறேன்.

புகழ் பாடுவதையும், கோசம் போடுவதையுமே மிகச்சிறந்த மக்கள் சேவை என்று எண்ணிக் கொள்ளப் பழக்கி இருக்கும் திராவிடத் தலைமைகளின் மத்தியில் கொள்கைகளை முன்னிறுத்தாது தன்னை முன்னிறுத்திப் பேசினால் கடிந்து கொள்ளும் தலைவனாக உயர்ந்து நிற்கிறார் சீமான். இங்கு யாரிடமும் தோளோடு தோழமை பாராட்டலாம், கை குலுக்கி உறவாடலாம். சாதி, மதம், பதவி என எந்த ஏற்றத் தாழ்வும் கிடையாது.

ஒரு மாநில முதல்வரை கடவுளுக்கு நிகராக கற்பனை செய்ய வைத்து அந்த புகழ் போதையில் மயங்கிக் கிடக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழும் இன்றைய சூழ்நிலையில், மிகவும் எளிமையான தலைவர்களை கொண்டுள்ளது நாம் தமிழர் கட்சி. மேலும் எளிய மக்களும் அணுகக்கூடிய வகையில் ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது இந்தக் கட்சி.

அரசியல் என்றால் சாக்கடை என்று சொல்லி ஒதுங்கி வந்த எளிய மக்களும், “அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்கமான தேவையும் அதை நிறைவு செய்யும் சேவையும்தான்” என்பதை உணர்ந்து அரசியலில் ஆர்வம் செலுத்துவது, நம் தமிழினத்தின் தலை நிமிர்வுக்கு ஒரு முதல் படி. தலைவர்களை புகழ்ந்துப் வைக்கும் பதாகைகள் இல்லை, மாலை மரியாதை போன்ற போலியான செயல்கள் இல்லை, காலில் விழும் கலாச்சாரம் இல்லை, குனிந்து நெளிந்து கும்பிடு போடும் அவலங்கள் இல்லை. சுய மரியாதையுடன் அரசியல் சேவை செய்ய நினைப்பவர்கள் தேர்வு செய்யும் கட்சியாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது.

அரசியல் பின்னணி இல்லாத, பொருளாதாரப் பின்னணி இல்லாத வேட்பாளர்களை, அதே நேரத்தில் பெண்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கை போன்றோர்களை 234 தொகுதிகளிலும் நிறுத்தி உள்ளது நாம் தமிழர் கட்சி. மற்ற கட்சிகள் கூட்டணி வலிமையை நம்பிகொண்டிருக்கும்போது, இக்கட்சி எளிய மக்களான நம் உறவுகளை மட்டுமே நம்பி, மக்கள் தந்த நன்கொடையை மட்டுமே நம்பி களத்தில் நிற்கிறது. இதை “எளிய மக்களின் அரசியல் புரட்சி” என்று அடையாளப்படுத்துகிறது நாம் தமிழர் கட்சி.

tamil.oneindia.com

TAGS: