வாக்காளர்களுக்கு ரூ.6000 கோடி பணம் பட்டுவாடா ஆகியுள்ளது… சொல்கிறார் ஈஸ்வரன்

easwarnகரூர்: தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வரை பணப்பட்டுவாடா நிகழ்ந்துள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் போது ஓட்டுகளுக்காக பணப்பட்டுவாடா நிகழ்ந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அரசியல் கட்சியினரால் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக வாக்குப் பதிவிற்கு முந்தைய நாளில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தமிழகம் முழுக்க அளனத்து தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நிகழ்ந்தது, எனவே தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணைத்தியடம் புகார் அளித்திருந்தார்.

இதேபோல பல்வேறு கட்சித் தலைவர்களும் பணப்பட்டுவாடா குறித்து குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் பணப்பட்டுவாடா குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நிகழ்ந்துள்ளது.

அனைத்து தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா செய்யப்படுவது தெரிந்தும் தேர்தல் ஆணையம், அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் மட்டும் வாக்குப்பதிவை ஒத்திவைத்துள்ளது.

மேலும், ஓட்டு பெறுவதற்காக அரசியல் கட்சினர் ரூ.6 ஆயிரம் கோடி வரை வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளனர். தேர்தலை தள்ளிவைப்பது என்பது பணப்பட்டுவாடாவிற்கு மேலும் வழி வகுக்கும்.

புதிய ஆட்சி அமைந்த பின்னர் அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் வாக்குப்பதிவு நடத்துவது, இடைத்தேர்தல் போல மாறிவிடும். எனவே இந்த தேர்தலை தள்ளி வைக்காமல், வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்.

அரவக்குறிச்சி பணப்பட்டுவாடா செய்யப்பட்டது பாவப்பட்ட பணம். அதை வாங்கி கொண்டு வாக்களிப்பது பாவத்தில் பங்கு கொள்வதற்கு சமம். திருப்பூரில் கண்டெயினர் லாரியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன.

தேர்தல் ஆணைய்ம் தி.மு.க- அ.தி.மு.க.விற்கு துணை போகிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது. அய்யம்பாளையம் அன்புநாதன் பிரச்சனையில் விசாரணை முடிவு இன்னும் வெளிவராதது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று ஈஸ்ரன் கூறினார்.

tamil.oneindia.com

TAGS: