மதிமுக, தமாகா, சிபிஎம், சிபிஐ, வி.சி. வாக்கு சதவீதத்தை ஓரம் கட்டிய… நாம் தமிழர்!

seeman-3443சென்னை: தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியான நாம் தமிழர் கட்சி வெற்றி பெறாவிட்டாலும் கூட தனிப்பட்ட கட்சிகள் வரிசையில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகளை விட அதிக வாக்கு சதவீதத்தையும் வென்றுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 1.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதேசமயம், மக்கள் நலக் கூட்டணி என்று மொத்தமாக எடுக்காமல், மதி்முக, சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமாகாவை தனியாக பார்த்தால் அவர்கள் நாம் தமிழர் கட்சியை விட குறைந்த வாக்கு சதவீதத்தையேப் பெற்றுள்ளனர்.

இக்கட்சியின் தலைவர் சீமான் தமிழகம் முழுவதும் செய்த தீவிரப் பிரச்சாரம், இவரது கட்சியினர் நடத்தி வந்த தீவிர களப் பணி, இக்கட்சியின் வித்தியாசமான தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பலவற்றின் காரணாமாக இக்கட்சியும் மக்களின் பார்வையில் விழுந்துள்ளது.

இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 1.1 சதவீத வாக்கு கிடைத்துள்ளது. இக்கட்சிக்கு இத்தேர்தலில் 4,58,104 வாக்குகள் கிடைத்துள்ளன. மதிமுகவுக்கு 0.9 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. அக்கட்சியின் வாக்குகள் 3,73,713. சிபிஐ பெற்ற வாக்குகள் 3,40,290 (0.8%). விடுதலைச் சிறுத்தைகள் பெற்ற வாக்குகள் 3,31,849 (0.8%), சிபிஎம் பெற்ற வாக்குகள் 3,07,303 (0.7%), தமாகா பெற்ற வாக்குகள் 2,30,711 (0.5%).

மொத்தத்தில் நீண்ட காலமாக அரசியல் களத்தில் உள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமாகாவை விட தனிப்பட்ட கட்சிகள் வரிசையில் அதிக வாக்கு சதவீதத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.

tamil.oneindia.com

TAGS: