சென்னை வியாசர்பாடி பகுதியில் மூன்று பைக்கில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது அரிவாளால் வெட்டி திடீர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 16 பேர் காயமடைந்தனர்.
சென்னை வியாசர்பாடியில் மல்லிகைப்பூ காலனி, சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் மீது, இருசக்கர வாகனங்களில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி திடீர் தாக்குதல் நடத்தினர்.
மின்வெட்டால் இருள் சூழ்ந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்தனர்.
சிறியவர்கள், முதியவர்கள் என்றும் வித்தியாசம் பாராமல் கண்ணில் பட்ட மக்களை எல்லாம் சரமாரியாக வெட்டிய அந்தக் கும்பல் பின்னர் தப்பிச் சென்றது.
இந்தத் தாக்குதலில் 16 பேர் படுகாயமடைந்தனர்.
மூன்று பைக்குகளில் வந்த ஆறு பேர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் முகத்தை துணியால் மறைத்திருந்ததாகவும் காயமடைந்தவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.
தற்போது தாக்குதலில் காயமடைந்த 16 பேரும் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடக்கம்.
இந்த தாக்குதல் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பாதிகப்பட்ட மக்களின் உறவினர்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். என்ன காரணத்திற்காக இச்சம்பவம் நடைபெற்றது என தெரியாததால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் 7 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்துள்ள ஓரிரு நாட்களிலேயே சென்னையில் இந்த சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-http://www.tamilwin.com