500 டாஸ்மாக் கடைகள் மூடல், கடை நேரம் குறைப்பு, விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி- ஜெ.வின் முதல் அதிரடி

jaya45567சென்னை: தமிழக முதல்வராக 6-வது முறையாக பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகம் சென்று 500 மதுக்கடைகளை மூடுதல், மதுக்கடைகளின் நேர திறப்பை குறைத்தல், விவசாய பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். சட்டசபை தேர்தலில் 134 இடங்களைக் கைப்பற்றிய அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு வளாக அரங்கத்தில் இன்று பகல் நடைபெற்ற விழாவில் 6-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழா முடிவடைந்ததும் நேராக தலைமைச் செயலகம் சென்றார் ஜெயலலிதா. அங்கு அரசு அதிகாரிகள் ஜெயலலிதாவுக்கு மலர் கொத்துகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதன் பின்னர் தம்முடைய அறையில் அமர்ந்து 5 முக்கிய கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜெயலலிதா முதல் கையெழுத்திட்ட கோப்புகள் விவரம்:

1) வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளுக்கு சிறுகுறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர கால கடன் மற்றும் நீண்ட கால கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து 31.3.2016 வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகால கடன் மற்றும் நீண்டகால கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்யும் உத்தரவில் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இதன் காரணமாக அரசுக்கு ரூ5780 கோடி செலவு ஏற்படும்.

2) மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதற்கான கோப்பில் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இதனால் ஆண்டு ஒன்றுக்கு ரூ1607 கோடி ரூபாய் மின்வாரியத்துக்கு அரசு மானியமாக வழங்கும். இந்த சலுகை இன்று முதல் நடைமுறைபப்டுத்தப்படும்.

3) 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிப்படி இளநிலைப்பட்டம், டிப்ளமோ பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை ரூ50,000; திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்படுகிறது. படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ25,000 உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி அனைத்து திருமண நிதி உதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்துக்காக வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதில் இருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கும் கோப்பில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

4) தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிப்படி கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும் விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கும் கோப்பில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

5) மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்றும் அதனை நிறைவேற்றும் வகையில் முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என்றும் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும் என்றும் குடிப்பழக்கத்துக்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு எனும் லட்சியம் அடையப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைத பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்கும் வரும் நிலையில் நாளை முதல் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்ற உத்தரவு, மற்றும் 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் என்ற உத்தரவு ஆகியவற்றுக்கான கோப்பில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

tamil.oneindia.com

TAGS: