புது தில்லி : மாதத்தில் ஒரு நாள் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும்படி அனைத்து மருத்துவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நம் நாட்டைப் பொருத்தவரை, மருத்துவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதேசமயத்தில், இரண்டே ஆண்டுகளில் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் கடினமாகும்.
இதனைக் கருத்தில்கொண்டே, அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதானது, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65-ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு நிகழ் வாரத்திலேயே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். இதன் மூலம் மருத்துவர்களால் மக்களுக்கு நீண்டகாலம் சேவைபுரிய முடியும்.
ஒரு நாளாவது இலவச சிகிச்சை: இந்த தருணத்தில் மருத்துவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் மாதத்தில் ஒரு நாளேனும் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க வேண்டும். அவ்வாறு கணக்கிட்டால், ஆண்டுக்கு 12 நாள்கள் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.
நாட்டில் ஒரு கோடி குடும்பங்கள் தங்களது சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுக்க முடிகிறது என்றால், ஆண்டுக்கு 12 நாள்கள் ஏழைகளுக்காக மருத்துவர்கள் சேவையாற்றுவதும் சாத்தியமே என்றார் பிரதமர் மோடி.
-http://www.dinamani.com