இந்திய முஸ்லிம்களுக்கு அமெரிக்க அரசு பாராட்டு

nisha_bishwalபயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரானவர்களாக இந்திய முஸ்லிம்கள் செயல்படுகின்றனர் என்று அமெரிக்க அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய வெளியுறவுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை இணையமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் பதிலளித்தார்.

குறிப்பாக, வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு முதலீடுகள் வருவது குறித்து கிரிஸ் மர்ஃபி என்ற எம்.பி. தனது கவலைகளை வெளியிட்டார்.

அவர் பேசியதாவது:
சவூதியைச் சேர்ந்த வகாபி முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் பெருமளவில் முதலீடுகளை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் பள்ளிகளையும், மதரஸா கல்வி நிலையங்களையும் அமைக்க அந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது.

இதன் மூலம், இந்த பயங்கரவாத சக்திகள் இந்தியாவில் காலூன்ற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார் அவர்.

இதற்கு நிஷா தேசாய் அளித்த பதில்:

பயங்கரவாத விவகாரங்களுக்காக நிதி வருவதைக் கண்டறியும் விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றி நாம் பெருமளவில் வெற்றியடைந்து வருகிறோம். வளைகுடா நாடுகள் மட்டுமல்லாது, பயங்கரவாதத்துக்காக வேறு எங்கிருந்து பணம் வந்தாலும் அதை இந்தியர்களே தடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இந்திய முஸ்லிம்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றார் அவர்.

-http://www.dinamani.com

TAGS: